அழகிற்கு அப்படி என்ன மெனக்கெடல் ஸ்ரீபவியின் ரகசியம்
தேர் நடந்து தெருவில் வரும் ஊர்வலமா... ஊர் உலகில் அவளப்போல பேர் வருமா... நல்ல பளிங்கு போல சிரிப்பு... என்ற பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் போல் இருக்கிறார். படித்த முடித்த கையுடன் மாடலிங் துறையில் இறங்கியவர்.
மிஸ் யுனிக் ஐகான், 2021 மிஸ் கிளாம் மாடல், 2024 மிஸ் சென்னை, மிஸ் சினி சார்ட் சென்னை, 2024 சைனிங் ஸ்டார் அவார்ட், வேல்ர்டு ரிக்கார்டர் என மாடலிங் துறையில் விருதுகளை வாங்கி குவித்திருக்கிறார்.
நடிகை தேவயானியுடன் புது புது அர்த்தங்கள் என்ற முதல் சீரியலில் கலக்கியவர் தொடர்ந்து ஒன்றிரண்டு சினிமாக்களிலும் தலைகாட்டியதுடன் தொடர்ந்து சீரியல்களில் கவனம் செலுத்தி வருகிறார். இப்பெருமைகளுக்கு சொந்தக்காரர் நம்ம மதுரை பொண்ணு நடிகை ஸ்ரீபவி.
எப்படி இது சாத்தியமாயிற்று என அவருடன் பேசியதிலிருந்து...
பிறந்தது, வளர்ந்தது மதுரை. ஆனால் சொந்த ஊர் திருச்செந்துார். சென்னையில் கல்லுாரி படிப்பை முடித்தேன். படிக்கிற காலத்திலேயே மாடலிங் மீது ஒரு கண். கேட் வாக் ரொம்ப பிடிக்கும். சென்னையில் நடந்த 'மிஸ்' போட்டிகளில் 'மிஸ் பண்ணாமல்' பங்கேற்க துவங்கினேன். முதல் மாடலிங் போட்டியிலேயே வின்னர் அவார்டு கிடைக்க பிறகு விளம்பர பட வாய்ப்பும் கிடைத்தது.
அந்த அறிமுகம் தான் நடிகை தேவயானியுடன் புது புது அர்த்தங்கள் சீரியல் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தது. பிறகு நம்ம மதுரை சிஸ்டர்ஸ், நடிகை ராதிகாவுடன் பொன்னி ராணி, பாக்கியலட்சுமி சீரியலில் கேமியோ ரோல் என பல வாய்ப்புகளை பெற்று தந்தது.
இதுதவிர 9 ஏஎம் -9பிஎம் என்ற சினிமா வாய்ப்பும் கிடைத்தது. இதற்கிடையில் மிஸ் ஆடிடியூ வாக், மிஸ் யுனிக், மிஸ் சினி சார்ட் சென்னை, மிஸ் சென்னை, மிஸ் கிளாம், அல்சா பா பிரான்ட் அம்பாசிட்டர், சைனிங் ஸ்டார் பட்டங்களை பெற்றேன். சில ஆண்டுகளுக்கு முன் 300க்கும் மேற்பட்ட மாடல்கள் பங்கேற்ற போட்டியில் பங்கேற்று முதல் பரிசு பெற்று உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றதை மறக்க முடியாது. அதுபோல லிங்கா புக் ஆப் வேர்ல்டு ரிக்கார்டில் இடம் பெற்றிருக்கிறேன்.
இந்நிலையில் மதுரை திருநெல்வேலி செல்லும் வழியில் கார் விபத்திற்குள்ளாகி 8 மாதங்களுக்கும் மேலாக ஓய்வில் இருக்க வேண்டிய சூழ்நிலை. இதனால் நடிகை ராதிகாவுடன் தாயம்மா சீரியலில் நடித்து கொண்டிருந்த வாய்ப்பையும் இழக்க வேண்டியதாயிற்று. விபத்து ஓய்வுக்கு பிறகு புது பொலிவுடன் மீண்டும் மாடலிங் துறையில் இறங்கியிருக்கிறேன்.
சென்னை துரைப்பாக்கம் கண்ணகிநகர் குடிசை மாற்று வாரிய பகுதிகளில் வளர்ந்ததால் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. நான் படிக்கிற போது டர்னிங் பாயின்ட் கல்வி அறக்கட்டளையுடன் இணைந்து அப் பகுதி ஏழை சிறார்களுக்கு இலவசமாக டியூஷன் எடுத்திருக்கிறேன். என்னாலான முடிந்த உதவிகளை கேட்பவர்களுக்கு செய்து வருகிறேன்.
தற்போது மாடலிங் போட்டிகளில் நடுவராக பங் கேற்க அழைப்பும் வந்த வண்ணம் இருக்கிறது. ஒரு திகில் சினிமாவிலும் நடித்து கொண்டிருக்கிறேன். தொடர்ந்து சினிமா வாய்ப்பும் வருகிறது.
அழகுக்கு என பெரிதாக எதுவும் மெனக்கெடுவதில்லை. மனதை 'பிரீயாக' வைத்து கொள்வேன். கோயில்களுக்கு செல்வேன். உணவு கட்டுப்பாடு எல்லாம் இல்லை. இதுதான் பியூட்டி சிக்ரெட். மாடலிங், சீரியல் வாய்ப்பை பயன்படுத்தி பெரிய பட்ஜெட்டில் தயாராகும் சினிமாக்களில் நடிக்க வேண்டும். ஸ்ரீபவி என பெயர் பேசப்படுமளவுக்கு நல்ல நடிகையாக வேண்டும். சாதிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார் உற்சாகமாக.