ஆரம்பத்தில் எனக்கு தாழ்வு மனப்பான்மை இருந்தது என்கிறார் சாய்பல்லவி
நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள ராமாயணா படத்தில் சீதையாக நடித்த சாய் பல்லவியின் தோற்றம், நடிகர்கள் தேர்வு அறிவிக்கப்பட்டதிலிருந்தே விவாதப் பொருளாக இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளாகத் திரையில் தனது இயல்பான தோற்றத்தை ஏற்றுக்கொண்ட விதம் குறித்தும், காலப்போக்கில் தன்னைப் பற்றித் தான் எவ்வாறு சவுகரியமாக உணரக் கற்றுக் கொண்டேன் என்பது குறித்தும் சாய் பல்லவி தற்போது மனம் திறந்து பேசியுள்ளார்.
மும்பையில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் சாய் பல்லவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அப்போது, சீதையாக தனது தோற்றம் குறித்து இணையதளத்தில் எழுந்து வரும் விமர்சனங்கள் மற்றும் நுணுக்கமான ஆய்வுகளுக்கு அவர் பதிலளித்தார். ஒரு பொது நபராக இருந்து கொண்டு இந்த முடிவை எப்படி எடுத்தீர்கள் என்றும், இயக்குநர்கள் இதற்கு எவ்வாறு எதிர்வினையாற்றினார்கள் என்றும் கேட்கப்பட்டபோது, கடந்த பத்து ஆண்டுகளாகவே இது தொடர்ந்து விவாதிக்கப்படும் ஒரு விஷயமாக இருந்து வருவதை சாய் பல்லவி ஒப்புக்கொண்டார்.
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், எனது திரைப்பயணத்தின் ஆரம்பத்தில் எனக்கு தாழ்வு மனப்பான்மை இருந்தது. பார்வையாளர்கள் எதார்த்தமான விஷயங்களைப் பார்க்கவே விரும்புகிறார்கள் என்று நான் நினைக்கிறேன். நானும் நிஜ வாழ்க்கைச் சூழல்களில் இருக்கும் எதார்த்தமான பெண்களின் கதாபாத்திரங்களையே தேர்ந்தெடுத்து நடித்துள்ளேன். எனது திரைப்பயணத்தின் தொடக்கத்தில் இன்று இருப்பது போல் தன்னம்பிக்கையுடன் இல்லை என்பதை வெளிப்படுத்தினார்.
மேலும் பெண்களுக்குத் தொடர்புடைய நிஜ வாழ்க்கைச் சூழல்களுக்குப் பொருத்தமான கதாபாத்திரங்களையே தான் எப்போதும் தேர்ந்தெடுப்பதாகத் தெளிவுபடுத்தினார். தனது தோற்றம், கதாபாத்திரத்திற்கும் பார்வையாளர்களுக்கும் இடையே ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். மக்கள் கதாபாத்திரத்துடன் ஒன்றிப்போக முடியாத அளவுக்கு செயற்கையாக மெருகேற்றப்பட்ட தோற்றத்தை நீங்கள் விரும்ப மாட்டீர்கள். நான் எப்போதும் எனது கதாபாத்திரங்களுக்கு உண்மையாக இருந்துள்ளேன். இயக்குநர்களும் இதில் எந்தத் தவறையும் கண்டதில்லை.
அதையடுத்து மேக்கப் குறித்துப் பேசிய சாய் பல்லவி, நான் இப்போது சிறிது லிப் கிளாஸ் ஐலைனர் மற்றும் மாய்ஸ்சரைசர் மட்டுமே அணிந்துள்ளேன். இது தற்பெருமைக்காக அல்ல. ஆனால் முகத்தில் பவுண்டேஷன் அல்லது கன்சீலர் பூசினால், நான் வேறு ஒரு நபரைப் போல உணர்கிறேன். அது எனக்குச் சரிப்பட்டு வராது. இது தனது தனிப்பட்ட விருப்பமே தவிர, மற்றவர்களுக்குத் தான் பரிந்துரைக்கும் ஒரு விதிமுறை அல்ல. மேக்கப் அணிவது உங்களுக்கு நன்றாக உணர வைத்தால், அது உங்கள் விருப்பம். குறிப்பிட்ட ஒரு விதத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக உங்களை ஒரு வட்டத்திற்குள் அடைத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று சாய் பல்லவி கூறினார்.