20வது ஆண்டில் 'சூப்பர் சிங்கர்' : பிரம்மாண்ட சீசனாக ஒளிபரப்பாகிறது
விஜய் டிவியின் நட்சத்திர நிகழ்ச்சியான 'சூப்பர் சிங்கர்' 20வது ஆண்டை எட்டியுள்ளது. இதை கொண்டாடும் வகையில் 'சூப்பர் சிங்கர் சீசன் 12 : நியூ ஏஜ்' என்ற பிரமாண்ட நிகழ்ச்சியை நடத்துகிறது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் இதுவரை 100 பாடகர்கள் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இதில் 10க்கும் மேற்பட்டவர்கள் திரைப்படங்களில் பாடி வருகிறார்கள்.
இந்தப் புதிய சீசனின் சிறப்பம்சமாக, முந்தைய சீசன்களில் போட்டியாளர்களாகவும் வெற்றியாளர்களாகவும் வலம் வந்த 14 முன்னணிப் பின்னணிப் பாடகர்களை மீண்டும் களம் இறக்குகிறது. நடுவர்களாக சத்ய பிரகாஷ், நிவாஸ், திவாகர், பிரவீன் சைவி, ஆர்.கே. ஆதித்யா, செந்தில் மற்றும் சந்தோஷ் ஹரிஹரன், புண்யா, பிரியங்கா, ரக்ஷிதா, நித்யஸ்ரீ, ரோஷினி, ராஜலட்சுமி மற்றும் சிவாங்கி ஆகியோர் பணியாற்ற இருக்கிறார்கள்.
தொகுப்பாளராக மா.கா.பா.ஆனந்தும், ஸ்ருதிகாவும் பணியாற்ற உள்ளனர். இந்தப் புதிய சீசன், வரும் 21ம் தேதி தொடங்குகிறது. இந்நிகழ்ச்சியை வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6:30 மணிக்கு ஸ்டார் விஜய் தொலைக்காட்சியிலும், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்திலும் காணலாம்.