சன்னி தியோலின் சூர்யா வெளியீடு ஒத்திவைப்பு : நீதிமன்றத்தில் தடை கோரிய மருத்துவ சங்கம்!
ஹிந்தியில் சன்னி தியோல் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சூர்யா : அண்ட் சே ஆரம்ப தக் என்ற படம் தணிக்கை வாரிய சிக்கலில் மாட்டியுள்ளது. நவம்பர் 20-ஆம் தேதி வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்த இப்படத்திற்கு திரைப்படத் தணிக்கை வாரியத்திடமிருந்து இன்னும் சான்றிதழ் கிடைக்காததால், படத்தின் வெளியீடு தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் டிரைலரில் மருத்துவர்கள் சித்தரிக்கப்பட்டுள்ள விதத்திற்கும், கதாநாயகன் குறிப்பிடும் முறைகேடுகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து, இந்திய மருத்துவச் சங்கம் கடந்த அக்டோபர் 22-ம் தேதி மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்குக் கடிதம் எழுதி, படத்தை அவசரமாக மறுஆய்வு செய்யக் கோரியிருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இப்படத்தை வெளியிடும் கமல் முகுத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‛‛இந்த படத்தை நாங்கள் எப்படி கற்பனை செய்தோமோ, அப்படியே பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். இப்படத்தின் மூலம் மருத்துவத் துறையினரை குறைத்து மதிப்பிட தாங்கள் முயற்சிக்கவில்லை. அதனால் படத்தை நடுநிலையோடு பாருங்கள். இப்படம், அதன் கதை மற்றும் அது முன்வைக்கும் கருத்து ஆகியவற்றில் நாங்கள் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளோம். முழுப் படத்தையும் பார்க்காமலேயே, சில வினாடிகள் ஓடும் டிரைலரை வைத்து ஒரு முழுமையான பிம்பம் கட்டமைக்கப்படுவது துரதிர்ஷ்டவசமானது என்று கூறியுள்ளார்.
மேலும், நாங்கள் தணிக்கை நடைமுறைகளை மதிக்கிறோம். தேவையான அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றக் கடமைப்பட்டுள்ளோம். அதே நேரத்தில், படத்தின் படைப்புச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதிலும் நாங்கள் உறுதியாக உள்ளோம். எந்தவொரு முடிவிற்கும் வருவதற்கு முன்பு, ஊடகத் துறையினரும் பார்வையாளர்களும் படத்தை நடுநிலையோடு பார்த்து, முழுக் கதையையும் உணர வேண்டும் என நாங்கள் மனமார்ந்து கேட்டுக்கொள்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
இப்படம், மருத்துவர்களுக்கோ அல்லது மருத்துவத் தொழிலுக்கோ எதிரானது அல்ல என்றும், ஒரு பெரிய அமைப்புக்குள் செயல்படும் குறிப்பிட்ட சில தனிநபர்களின் ஊழல், சுரண்டல் மற்றும் திட்டமிட்ட முறைகேடுகளை மட்டுமே இப்படம் பேசுகிறது என்றும் படக்குழு விளக்கமளித்துள்ளது.
எம். பத்மகுமார் இயக்கியுள்ள சூர்யா, 2018-ஆம் ஆண்டு அவர் இயக்கத்தில் வெளியான ஜோசப் என்ற மலையாளப்படத்தின் ஹிந்தி ரீமேக் ஆகும். இதில் சன்னி தியோலுடன் ரவி கிஷன் மற்றும் பிரக்யா ஜெய்ஸ்வால் ஆகியோர் நடித்துள்ளனர்.
முன்னதாக, சன்னி தியோல் நடித்துள்ள ஹிந்திப் படமான சூர்யா: அண்ட் சே ஆரம்ப தக் வெளியீட்டிற்குத் தடை விதிக்கக் கோரித் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் நவம்பர் 4-ஆம் தேதி தள்ளுபடி செய்தது. மருத்துவத் துறையினரால் தாக்கல் செய்யப்பட்ட இதே போன்றதொரு மனு நீதிமன்றத்தின் வேறொரு அமர்வில் ஏற்கனவே நிலுவையில் இருப்பதைச் சுட்டிக்காட்டி நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
மருத்துவர்கள் மீதான உடல்ரீதியான தாக்குதல்களை வீரதீரச் செயலாக டிரெய்லர் சித்தரிப்பதாகவும், சுகாதாரத் துறையில் ஊழல் நிறைந்துள்ளதாகப் பொதுமைப்படுத்துவதாகவும் கூறி, படத்தின் வெளியீட்டிற்குத் தடை கோரி மருத்துவர் நசிகேதா பாட்டியா மற்றும் மருத்துவர் துருவ் சவுகான் ஆகியோர் அந்தப் பொதுநல வழக்கைத் தாக்கல் செய்திருந்தனர்.