பிளாஷ்பேக்: இளையராஜாவின் கிரைம் கதையை காதல் கதையாக மாற்றிய பாரதிராஜா
பெரிய அளவில் வெற்றி பெறாவிட்டாலும் பாரதிராஜா இயக்கிய 'நாடோடி தென்றல்' படம் அவரது கேரியரில் முக்கியமான படமாகவும், வித்தியாசமான படமாகவும் அமைந்தது. இளையராஜாவே படத்தின் கதையை எழுதியிருந்ததோடு, ஆங்கிலப் பாடலை தவிர்த்து அனைத்து பாடல்களையும் அவரே எழுதினார். எழுத்தாளர் சுஜாதா, பாரதிராஜா, இளையராஜா கூட்டணியோடு பணியாற்றிய படமும் இதுதான். ஆங்கிலேயர் காலத்தில் நடக்கும் பீரியட் டிராமா என்பதால் சுஜாதா வசனம் எழுதினார்.
கார்த்திக் நீண்ட இடைவேளைக்குப் பின் தன் குருநாதர் பாரதிராஜா இயக்கத்தில் நடித்திருந்தார். கூடவே அவரின் இன்னொரு அறிமுகம் பாண்டியனுக்கு ஒரு குணச்சித்திர வேடம். பாரதிராஜாவின் 'ர' வரிசை நாயகிகளில் ரஞ்சிதா இந்தப்படத்தில் அறிமுகமாகியிருந்தார். 'புது நெல்லு புது நாத்து' மூலம் வில்லனாக அறிமுகமாகி நாயகனாக மாறிய நெப்போலியன் தன் குருநாதருக்காக கவுரவ வேடத்தில் நடித்திருந்தார். இவர்களோடு கிருபா என்ற பிரான்ஸ் நாட்டு பெண்மணியும் நடித்திருந்தார்.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், நகைத் தயாரிப்பாளர் குடும்பத்தைச் சேர்ந்த கார்த்திக், அவ்வூருக்கு வாத்து மேய்க்க வரும் கூட்டத்தின் இளமங்கை ரஞ்சிதா மேல் காதல் கொள்வதும், அந்த ஊரை நிர்வகிக்கும் ஆங்கிலேய கலெக்டர் துரையின் தங்கை கிருபா கார்த்திக் மேல் காதல் கொள்வதும், ரஞ்சிதாவின் முறைமாமன் பாண்டியன், வெள்ளைக்காரத் துரை ஆகியோர் கார்த்திக்கு எதிராக எப்படி இயங்குகின்றார்கள் என்பதையும் வைத்து எழுதப்பட்ட முக்கோண காதல் கதை.
கொடுமையாக நடந்து கொள்ளும் ஒரு வெள்ளைக்கார கலெக்டரை யாரோ ஒரு மர்ம நபர் சுட்டுக் கொல்வதும், கொன்றது யார் என்ற போலீஸ் தேடலுமாக ஒரு கிரைம் திரில்லராகத்தான் இந்த படத்தின் கதை முதலில் இருந்தது. ஆனால் அதே கதையை முக்கோண காதல் கதையாக மாற்றினார் பாரதிராஜா. அதே மாவட்ட கலெக்டரின் மகள் ஒரு தமிழ் இளைஞனை உருகி உருகி காதலித்தால் எப்படி இருக்கும் என்று மாற்றி யோசித்து உருவானதுதான் 'நாடோடி தென்றல்'.