பிளாஷ்பேக் : கமல் படத்தை 'மொக்கை படம்' என விமர்சித்த அதன் இயக்குனர்
1992ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் 'சிங்காரவேலன்'. இத்திரைப்படத்தை ஆர். வி. உதயகுமார் இயக்கியுள்ளார், கமல்ஹாசன் மற்றும் குஷ்பூ முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கவுண்டமணி, வடிவேலு, மனோரமா, ஜெய்சங்கர், சார்லி, மற்றும் பாடகர் மனோ ஆகியோர் நடித்திருந்தனர்.
இளையராஜாவின் குடும்ப நிறுவனமான பாவலர் கிரியேஷன் சார்பில் அவரது அண்ணன் ஆர்.டி.பாஸ்கர் படத்தை தயாரித்தார். இளையராஜா இசையமைத்திருந்தார்.
கமல்ஹாசன் சிங்காரவேலன் (வேலன்) என்ற கிராமத்து இளைஞராக நடித்துள்ளார். குஷ்பூ, சுமதி என்ற நகரத்துப் பெண்ணாக நடித்துள்ளார். கிராமத்தில் வாழும் கமல்ஹாசன் நகரத்தில் வாழும் தனது அத்தை மகளை கண்டுபிடித்து திருமணம் செய்ய முயற்சிப்பது தான் படத்தின் கதை. ஆனால் அவரிடம் இருப்பதோ சிறுவயதில் எடுக்கப்பட்ட அத்தை மகளின் ஒரு படம் மட்டுமே. அதை வைத்துக்கொண்டு எப்படி அவர் அத்தை மகளை கண்டுபிடிக்கிறார் என்பது திரைக்கதை.
படத்தை இயக்கிய, ஆர்.வி. உதயகுமார் பின்னாளில் இந்த படத்தை 'மொக்கை படம்' என்று பல்வேறு இடங்களில் குறிப்பிட்டு இருக்கிறார். அதாவது, சில நேரங்களில் மொக்கை சினிமா ஓடும். என்னுடைய சிங்காரவேலன் ஒரு மொக்கை சினிமா. கமல் சாரை வைத்து எடுக்க வேண்டிய படமாக அது இல்லை என ஒரு சினிமா நிகழ்வில் பேசியிருந்தார்.