தமிழுக்கு முக்கியத்துவம் இல்லை : அனிருத் இசையை விமர்சித்த கங்கை அமரன்
இசையமைப்பாளர் இளையராஜாவின் தம்பி கங்கை அமரன். இயக்குனர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர், சமீபத்தில் நடிகர் என் பன்முகத் தன்மை கொண்டவர். சமீபத்தில் இவர் அளித்த ஒரு பேட்டியில் இசையமைப்பாளர் அனிருத்தின் இசை பற்றி விமர்சித்து இருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ‛‛இளையராஜா, ஏஆர் ரஹ்மான் தவிர்த்து சமீபத்திய இளம் இசையமைப்பாளர்களின் இசையில் வெளியாகும் பாடல்களில் நீண்டநாள் நிலைத்து நிற்கும் பாடல் ஒன்றை சொல்ல முடியும். முன்புபோல் இசை இல்லை. பாஷையே தெரியாமல் பாடல் போடுகிறார்கள். ஆனால் இதை யாரும் ஒப்புக் கொள்வது கிடையது. அனிருத் இசையில் தமிழுக்குரிய முக்கியத்துவமும், தமிழ் அடையாளமும் இல்லை. அவரது இசையில் புதுமை உள்ளது. இசையில் புதிய ஸ்டைலை உருவாக்கி உள்ளார், அதை நான் பாராட்டுகிறேன். ஆனால் தமிழ் சினிமாவுக்கும், தமிழுக்கும் எவ்வளவு தூரம் பொருந்துகிறது என்பதையும் பார்க்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.