கீர்த்தி சுரேஷின் யோசனையில் படமாக்கப்பட்ட ஹேர்பின் சண்டைக்காட்சி
நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் ராதிகா ஆப்தே இணைந்து நடித்த 'அக்கா' என்கிற வெப் சீரிஸ் சமீபத்தில் வெளியாகி உள்ளது. இயக்குனர் தர்மராஜ் ஷெட்டி இதை இயக்கியுள்ளார். இதில் கீர்த்தி சுரேஷ் ஒரு பக்கம் கருணை உள்ளம் கொண்டவராகவும் இன்னொரு பக்கம் கடும் குணம் கொண்டவராகவும் ஒரு கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இருமுகம் காட்டி நடித்துள்ளார். இந்த வெப் சீரிஸில் சண்டை காட்சிகளிலும் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். குறிப்பாக கீர்த்தி சுரேஷின் ஹேர்பின் சண்டைக்காட்சி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது.
இந்த சண்டைக் காட்சி குறித்து இயக்குனர் தர்மராஜ் ஷெட்டி கூறும்போது, “கீர்த்தி சுரேஷின் நடிப்புத் திறமை மீது எங்களுக்கு எப்போதுமே முழு நம்பிக்கை இருந்தது. ஆனால் அவர் ஆக்ஷன் காட்சிகளை காட்டிய ஈடுபாடு ரொம்பவே ஆச்சரியம் அளித்தது. தனது சொந்த ஆளுமையை சண்டைக்காட்சிகளில் அவர் கொண்டு வந்தார். குறிப்பாக தனது எதிரிகளை ஹேர்பின் மூலம் கொல்லும் ஸ்டைல், முழுக்க முழுக்க அவருடைய சொந்த யோசனைதான். அது அற்புதமாகவே அமைந்தது” என்று பாராட்டியுள்ளார்.