2026ல் 'ஹாட்ரிக்' ரிலீஸ், மீண்டும் 'ஹிட்' அடிப்பாரா சூர்யா ?
தமிழ் சினிமாவில் தனது 30வது ஆண்டில் நாயகனாக பயணித்துக் கொண்டிருப்பவர் சூர்யா. 1997 செப்டம்பர் 6ம் தேதி அவர் நாயகனாக அறிமுகமான 'நேருக்கு நேர்' படம் வெளியானது. அப்படத்தில் இன்றைய முதல்வரும், அன்றைய முன்னணி நடிகர்களில் ஒருவருமான விஜய்யின் படத்தில் அறிமுகமானவர் சூர்யா.
2013ல் வெளிவந்த 'சிங்கம் 2' படம்தான் வியாபார ரீதியாக பெரிய லாபத்தைத் தந்த சூர்யாவின் படமாக இருந்தது. அதற்குப் பிறகு கடந்த 13 வருடங்களில் அவர் நடித்து வெளிவந்த படங்கள் சுமாரான படங்களாகவும், தோல்விப் படங்களாகவும் மட்டுமே அமைந்தன.
இடையில் ஓடிடியில் நேரடியாக வெளியான 'சூரரைப் போற்று, ஜெய் பீம்,' அவருக்கு பெரிய வரவேற்பைக் கொடுத்தன. 'சூரரைப் போற்று' படம் அவருக்கு சிறந்த நடிப்புக்கான தேசிய விருதையும் பெற்றுக் கொடுத்தது. தியேட்டர்களில் வெளியான அத்தனை படங்களின் தோல்வியை, இந்த இரண்டு படங்கள் சரி செய்தது.
ஆனால், இந்த 2026ம் வருடம் சூர்யாவுக்கு மிகச் சிறப்பான ஆண்டாக இதுவரையில் அமைந்துள்ளது. அவர் நடித்த 'கருப்பு' திரைப்படம் மே மாதத்தில் வெளிவந்து 340 கோடி வசூலைக் குவித்தது. அவருக்கு முதல் 300 கோடி வசூலைப் பெற்றுத் தந்தது. அதற்கடுத்து ஆகஸ்ட் மாதம் வெளிவந்த 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படம் 200 கோடி வசூலைக் கடந்தது.
அடுத்து இந்த வருடத்தின் மூன்றாவது படமாக 'சீன்' படம் நாளை மறுநாள் நவம்பர் 6ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படமும் சூர்யாவுக்கு வெற்றியாக அமைந்து ஹாட்ரிக் ஹிட்டைத் தருமா என்ற எதிர்பார்ப்பு திரையுலகினரிடமும், ரசிகர்களிடமும் உள்ளது. அப்படி நடந்தால் நீண்ட வருடங்களுக்குப் பிறகு ஒரு முன்னணி ஹீரோவுக்குண்டான சாதனையாக அமையும்.