200 கோடி மோசடி: 'ஜெயிலர் 2' பட நடிகைக்கு சம்மன்
'ஜெயிலர் 2' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியவர் நோரா பதேஹி. பெங்களூருவைச் சேர்ந்த தரகர் சுகேஷ் சந்திரசேகர் மோசடி வழக்கில் நோராவிற்கும் தொடர்பு இருப்பதாகவும், விசாரணைக்கு வரவேண்டும் என்றும் நோராவிற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
பெங்களூருவைச் சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவர், அரசியல் தலைவர்கள் மற்றும் ஆட்சியாளர்களுடன் நட்பு இருப்பதாகக் கூறி தொழிலதிபர்கள், அரசியல்பிரபலங்கள் உள்பட பலரை ஏமாற்றி பணமோசடி செய்ததாக புகார்கள் எழுந்தன. தேர்தல் ஆணையத்துக்கு 50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு உள்பட சில வழக்குகளில் கைது செய்யப்பட்ட அவர், சிறையில் அடைக்கப்பட்டார்.
அதோடு சிறையில் இருந்தபடியே தொழிலதிபர் ஷிவிந்தர் சிங் என்பவர் மனைவி அதிதி சிங்கை ஏமாற்றி 200 கோடி மோசடி செய்தது தொடர்பாக சுகேஷ் சந்திரசேகர் மீது டெல்லி பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இவ்வழக்கில் இந்தி நடிகை நோரா பதேஹிக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்ததும், அவரிடம் போலீசார் ஏற்கெனவே விசாரணை நடத்தினர். இவ்வழக்கு தொடர்பாக நோரா பதேஹி கடந்த 2ம் தேதி ஆஜராக டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அவர் ஆஜராகவில்லை. ஆனால் சம்மன் தாமதமாக கிடைத்ததாக கூறி ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி மனு தாக்கலும் செய்தார்.
இதனால் அதிருப்தி அடைந்த நீதிமன்றம், வருகிற 6ம் தேதி கண்டிப்பாக ஆஜராக மீண்டும் சம்மன் அனுப்ப உத்தரவிட்டது. ஏற்கெனவே 'தோழா' படத்தில் ஆடிய நோரா பதேஹி விரைவில் வெளிவர இருக்கும், 'காஞ்சனா 4'ம் பாகத்திலும் ஆடியுள்ளார். ஒரு பாட்டுக்கு ஆட 3 கோடி வரை சம்பளம் வாங்குகிறார் நோரா.