பிளாஷ்பேக்: வெள்ளி விழா தீபாவளி படம்: 'தவசி'க்காக நடத்தப்பட்ட மகாமகம்
25 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டாடப்பட்ட தீபாவளியன்று வெளியான படம் 'தவசி'. உதயசங்கர் என்பவர் இயக்கிய இந்த படத்தில் விஜயகாந்த் தந்தை - மகன் என்ற இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். ஜெயசுதா தந்தைக்கு ஜோடியாகவும், சவுந்தர்யா மகனுக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார்கள். இவர்களுடன் பிரத்யூஷா, ஸ்ரீமன், நாசர், வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
வித்யாசாகர் இசை அமைத்திருந்தார். 'தந்தன தந்தன தைமாசம், தேசிங்கு ராஜாதான், ஏல இளமயிலே' உள்ளிட்ட அத்தனை பாடல்களும் ஹிட்டானது. சிறந்த இசை அமைப்பாளருக்கான தமிழ்நாடு அரசு விருது வித்யாசாகருக்கு கிடைத்தது. வடிவேலுக்கு சிறந்த காமெடி நடிகருக்கான விருது கிடைத்தது.
ஒரு கிராமத்து ஜமீன் குடும்ப சண்டைதான் படத்தின் கதை. அப்பா தவசிக்கு வரும் அவமானங்களை மகன் பூபதி எப்படி துடைக்கிறார் என்பது திரைக்கதை. படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி, பொள்ளாச்சி மற்றும் உடுமலைப்பேட்டையில் தொடர்ந்தது. விஜயகாந்த் மற்றும் சவுந்தர்யா பங்கேற்ற பாடல் காட்சிகள் மூணார், பாலக்காடு, குன்னூர் மற்றும் கொடைக்கானலில் படமாக்கப்பட்டன.
கும்பகோணம் மகாமகம் குளத்தைப் போன்ற பிரமாண்டமான அரங்கம் இந்தப் படத்திற்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது. புனித நீராடும் காட்சியில் சுமார் 10,000 துணை நடிகர்கள் பங்கேற்றனர். சுமார் 30 கலைஞர்கள் இதில் நடித்தனர். பல்வேறு திசைகளில் இருந்து ஒன்பது கேமராக்கள் மூலம் இந்தக் காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்த ஆண்டு தீபாவளி பட லிஸ்ட்டில் தவசியையும் தாராளமாக சேர்க்கலாம்.