உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: கே.பாலச்சந்தரை சினிமாவிற்கு அழைத்து வந்த எம்ஜிஆர்

பிளாஷ்பேக்: கே.பாலச்சந்தரை சினிமாவிற்கு அழைத்து வந்த எம்ஜிஆர்

இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர், சினிமாவிற்கு வருவதற்கு முன்பு அரசு பணியில் இருந்தார். விடுமுறை நாட்களில் நாடகம் நடத்தினார். அவர் நடத்திய குடும்ப மற்றும் சமூக நாடகங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் அரசு வேலையை விட்டு விட்டு முழுநேர நாடக பணியில் இறங்கினார். பாலசந்தர் நடத்திய நாடகங்களில் ஒன்று 'மெழுகுவர்த்தி'. அந்த நாடகத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

ஒரு முறை அந்த நாடகத்திற்கு எம்.ஜி.ஆர். தலைமை தாங்கினார். நாடகம் எம்.ஜி.ஆரை வெகுவாகக் கவர்ந்தது. நாடகத்தின் இறுதியில் மேடை ஏறி பேசிய எம்ஜிஆர் 'பாலசந்தரைப் போன்ற இளைஞர்கள், திரை உலகில் சேவை செய்ய முன்வரவேண்டும். அதற்குரிய வாய்ப்பை நான் கண்டிப்பாக பெற்றுத்தருவேன்' என்றார்.

பேசியதோடு நிற்காமல் அதை உடனடியாக நிறைவேற்றவும் செய்தார். அப்போது எம்.ஜி.ஆர், நடிக்க 'தெய்வத்தாய்' என்ற படத்தை தயாரிக்க, ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் நிறுவனம் முடிவு செய்திருந்தது. அப்படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதும் வாய்ப்பை பாலசந்தருக்கு வழங்குமாறு வீரப்பனிடம் எம்.ஜி.ஆர். கூறினார். அதன்படியே, பாலசந்தரை அழைத்து, வசனம் எழுதும் பொறுப்பை ஆர்.எம்.வீ. ஒப்படைத்தார்.

நாடகத்துறைதான் உலகம் என்று கருதியிருந்த பாலசந்தரின் திரை உலகப்பிரவேசம் இவ்வாறுதான் நிகழ்ந்தது. இது, பாலசந்தரின் வாழ்க்கையில் மட்டுமல்ல, தமிழ்த்திரை உலக வரலாற்றிலும் பெரும்திருப்பு முனையை ஏற்படுத்தியது.

'தெய்வத்தாய்' படம் 1964ம் ஆண்டு வெளிவந்தது. எம்.ஜி.ஆரும், சரோஜாதேவியும் நடித்த இந்தப் படத்தை பி.மாதவன் இயக்கியிருந்தார். இசை: எம்.எஸ்.விஸ்வநாதன். படம் பெரிய வெற்றி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !