உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நாம் யார் என்பதை மற்றவர்களுக்கு நிரூபிக்கத் தேவையில்லை: ரசிகர்களுக்கு சூர்யா அட்வைஸ்

நாம் யார் என்பதை மற்றவர்களுக்கு நிரூபிக்கத் தேவையில்லை: ரசிகர்களுக்கு சூர்யா அட்வைஸ்


விஜய் முதல்வராகி விட்டதால் மற்ற நடிகர்களுக்கு அரசியல் ஆசை வந்து விட்டது. தனுஷ் அதிகாரபூர்வமாகவே தொடங்கி விட்டார். அடுத்ததாக சூர்யாவும் அரசியலில் குதிக்க இருக்கிறார். இதற்காக தனது ரசிகர் மன்றங்களை பலப்படுத்தி வருகிறார் என்ற தகவல் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் அவர் தற்போது நடித்துள்ள 'சீன்' படத்தின் விழாவில் 'நாம் யார் என்பதை யாருக்கும் நிரூபிக்கத் தேவையில்லை' என்று பேசியிருக்கிறார்.

சூர்யா, நஸ்ரியா நசிம் நடிக்கும் 'சீன்' படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகிற 6ம் தேதி வெளியாகிறது. இந்த படத்தில் நஸ்லென், ஆனந்தராஜ், லால், ராஜ்பிரியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'ஆவேசம்' படத்தை இயக்கிய ஜீத்து மாதவன் இயக்கி உள்ளார். வினீத் அகஸ்டியன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைந்திருக்கிறார். ழகரம் ஸ்டுடியோஸ் மற்றும் 2 டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் சூர்யா - ஜோதிகா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் சூர்யா பேசியதாவது: திரை உலகில் அறிமுகமாகி 28 வருடங்கள் ஆகிவிட்டது. கொஞ்சம் கூட அன்பு குறையாமல் என் மீது பாசம் காட்டி வருகிறீர்கள். மேடையில் நிற்க வைத்து அழகு பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். நற்பணி மன்றம் என்றால் எப்படி இருக்க வேண்டும்? நாம் யார்? நாம் (ரசிகர்கள்) எப்படி இருக்க வேண்டும்? என்பதை மற்றவர்களுக்காக நாம் ப்ரூப் செய்ய வேண்டியதில்லை. 'மற்றவர்கள் என்ன பேசினாலும் அதை எதிர்த்து பேச வேண்டாம்' என்று நான் சொன்ன ஒரு வார்த்தைக்கு கட்டுப்பட்டு, எப்போதும் அந்த பேரன்பை கடைப்பிடித்து வருகிறீர்கள்.

500 நன்கொடையாளர்கள் மூலம் ரத்த தானத்தை தொடங்கினோம். இப்போது ஒவ்வொரு ஆண்டும் 5000 நன்கொடையாளர்கள் ரத்த தானத்தை வழங்குகிறார்கள். நாங்கள் ஏராளமான வாட்ஸ்அப் குரூப்களை வைத்திருக்கிறோம். அதில் டாக்டர்ஸ் இருக்கிறார்கள். வக்கீல்கள் இருக்கிறார்கள். தொழிலதிபர்கள் இருக்கிறார்கள். இன்ஜினியர்கள் இருக்கிறார்கள். அண்மையில் ஒரு தம்பிக்கு காலில் ஆபரேஷன் செய்ய வேண்டிய நிலை இருந்தது. இது தொடர்பாக டாக்டர்ஸ் குரூப்பில் ஒரு பதிவை பதிவிட்டோம். உடனடியாக கட்டணம் இல்லாமல் அந்த ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்தது. இவை அனைத்தும் ஒரே குடும்பம். அது என் குடும்பம்.

நானும் ஜோவும் ஜீத்துவின் 'ரோமான்சம்' படத்தைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தோம். அவருடைய 'ஆவேசம்' படமும் எனக்கு பிடித்திருந்தது. அவர் உருவாக்கும் உலகம் ஒவ்வொன்றும் வித்தியாசமானதாக இருந்தது. அதேபோல் 'சீன்' திரைப்படமும் வித்தியாசமானதாக இருக்கும்.

ஸ்பெஷல்
எனக்கு இந்த வருஷம் மிகவும் ஸ்பெஷல். மூன்று படங்கள் வெளியாகிறது. இதற்கு முன் 'மாயாவி', 'கஜினி', 'ஆறு' என மூன்று படங்கள் வெளியானது என நினைக்கிறேன்.

'கருப்பு' 45 நிமிடங்களில் கதை கேட்டு நடிக்க முடிவெடுத்தேன். தொடர்ந்து ஆக்ஷன் படங்களில் மட்டுமே நடித்து வந்தேன். ஃபேமிலி ஓரியண்டட் படங்களில் நடிக்க வேண்டும் என நினைத்து 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் நடித்தேன். அதுவும் உங்களுக்கு பிடித்திருந்தது. அதேபோல் இந்த படமும் நீங்கள் எதிர்பார்க்காத படமாக இருக்கும்.

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஜாலியாக திரையரங்கத்திற்கு வந்து, இந்த படத்தை சந்தோஷமாக பாருங்கள். தனுஷ் ஒரு 'ட்விட்'டில், 'சூர்யாவின் படத்திற்காக என் படத்தினை தள்ளி வைக்கிறேன்' என்று சொன்னார். அதற்காக அவருக்கும் நன்றி.

வெற்றி குறித்து எனக்குள் ஒரு கேள்வி இருக்கிறது. என்ன செய்தால் வெற்றி பெற முடியும்? அது மட்டும் போதுமா.. அதனால் வெற்றி பெறுவதும்... தோல்வி அடைவதும்... அன்றாட வாழ்க்கையில் நாம் அடிக்கடி பார்ப்பது தான்.

இந்த இரண்டும் அவசியம்
20 வயதில் ஒரு வேலை வேண்டும். 25 வயதில் என் அக்கவுண்டில் இவ்வளவு பணம் இருக்க வேண்டும். 30 வயதில் ஒரு வீடு வாங்கி விட வேண்டும். 50 வயதில் ஒரு பிரம்மாண்டமாக வீட்டை கட்டிட வேண்டும் என்ற ஆசை இயல்பாக இருக்கும். நான் தற்போது 50 வயதை கடந்து விட்டேன். நான் இப்போது என்ன நினைக்கிறேன் என்றால்... மனதில் அமைதி வேண்டும் என விரும்புகிறேன். அத்துடன் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். இந்த இரண்டு தான் அவசியம் என நினைக்கிறேன். இந்த இரண்டும் இருந்தால் இவற்றில் எல்லாம் அடங்கிவிடும்.

என்னால் என் பெற்றோர்களை முடிவு செய்ய முடியாது. என் உடன் பிறந்த சகோதர, சகோதரிகளையும் முடிவு செய்ய முடியாது. நான் பிறந்து விட்டேன். ஆனால் மனைவி அமைவதெல்லாம் ...! என்று சொல்வார்கள் இல்லையா..? அதேபோல் என்னை தற்போது கை பிடித்து முன்னால் அழைத்துச் செல்வது என் ஜோதிகா தான். அதற்காக அவருக்கு நன்றி.

வாழ்க்கை மீது நம்பிக்கை வையுங்கள். வாழ்க்கை அழகானது. நாம் மூச்சு விடும் வரை எல்லா விசயங்களும் மறு பரிசீலனைக்கு உட்பட்டவை தான். எவை வேண்டுமானாலும் மாறலாம். எவற்றை வேண்டுமானாலும் திருத்திக் கொள்ளலாம். மூச்சு விடும் வரை தோல்வி என்பது இல்லை. எதுவும் முடிவில்லை. எதுவும் பிரிவில்லை. எதுவும் உடைந்து போகவில்லை. எல்லாவற்றையும் சரி செய்ய இயலும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !