சிவகார்த்திகேயன், ‛பிளாக்' பாண்டி என்ன பிரச்னை : பழைய வீடியோ வைரல் ஆனது ஏன்?
ஒரு காலத்தில் சிவகார்த்திகேயனும், ‛பிளாக்' பாண்டியும் நண்பர்களாக இருந்தார்கள். சினிமா வாய்ப்புகளை ஒன்றாக தேடினார்கள். சில ஆண்டுகளில் சிவகார்த்திகேயன் சினிமாவில் பெரிய ஹீரோ ஆகிவிட்டார். பிளாக் பாண்டி வாய்ப்புகளை தேடிக்கொண்டு இருந்தார். அந்த சமயத்தில் சிவகார்த்திகேயன் 20 ஆயிரம் பணத்தை பிளாக் பாண்டிக்கு கொடுத்து அனுப்ப, அதை வாங்க மறுத்தவர் எனக்கு சினிமா வாய்ப்புதான் வேண்டும். பணம் அல்ல என்று கூறியிருக்கிறார். இதை ஒரு பேட்டியில் வெளிப்படையாக பேச, அது வைரல் ஆனது. பின்னர், அந்த வீடியோ நீக்கப்பட்டது. இப்போது பல ஆண்டுகளுக்குபின் மீண்டும் அந்த விவகாரம் சோஷியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. சிவகார்த்திகேயனை சிலர் திட்டி தீர்க்கிறார்கள்.
இந்நிலையில் ஒரு வீடியோ வெளியிட்ட பிளாக் பாண்டி, ‛‛சிவகார்த்திகேயன் எனக்கு நண்பராக இருந்தவர். தற்போதும் இருப்பவர். அவர் கொடுத்து அனுப்பிய பணத்தை நான் வாங்கவில்லை. எனக்கு பட வாய்ப்பு கொடுத்தால் நன்றாக இருக்கும் என சொல்லி அனுப்பினேன். அதை பற்றி பேட்டியில் சொன்னது தவறாக சித்தரித்துவிட்டார்கள். அதனால் மனஸ்தாபம் ஏற்பட்டது. அது பற்றி நான் நேரில் சென்று விளக்கம் கொடுத்தேன். பேசி முடிக்கப்பட்ட ஒரு விஷயத்தை தற்போது மீண்டும் பரப்பி, சிவகார்த்திகேயன் என்னை அசிங்கபடுத்தியதாக பேசுகிறார்கள். அவர் பெயருக்கு ஏன் களங்கம் விளைவிக்கிரீங்க.
திரையுலகில் ஒவ்வொருவரும் கஷ்டப்பட்டுதான் ஓர் இடத்திற்கு வருகிறார்கள். யு-டியூப் மற்றும் ஊடக நண்பர்கள் தயவுசெய்து இதுபோன்ற தவறான செய்திகளைப் பரப்பி சிவகார்த்திகேயனின் பெயருக்குக் களங்கம் விளைவிக்காதீர்கள். என்னையும் உணவிற்கே வழியில்லாதவன் போலச் சித்தரிக்காதீர்கள்.
மீண்டும் இந்த விஷயத்தால் சிவகார்த்திகேயனுக்குச் சங்கடம் ஏற்பட்டிருந்தால், அவருக்கு என் வருத்தத்தையும் 'மன்னித்துவிடு நண்பா' என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். பொதுமக்கள் மற்றும் நேயர்கள் சமூக வலைத்தளங்களில் வரும் அனைத்துச் செய்திகளையும் உடனே நம்பாமல், பின்னணியில் இருக்கும் உண்மையை உணர்ந்து நம்புமாறு கேட்டுக்கொள்கிறேன் எனப் பேசியிருக்கிறார்.
இப்படி சிவகார்த்திகேயனுக்கு எதிராக ஒரு டீம் சோஷியல் மீடியாவில் வேலை செய்வதாக கூறப்படுகிறது. அவர்களே முன்பு வெளியான பேட்டியை இப்போது எடுத்து அதை வைரல் ஆக்குவதாக தகவல்.