ஒரே சூரியன், ஒரே சந்திரன், ஒரே ஒரு தலைவர் : அனிருத் பதிவு
ரஜினியின் ஜெயிலர் 2 படம் நாளை வெளியாகிறது. படத்தை வரவேற்க அவரது ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். அதோடு திரையுலகிலும் அவரது ரசிகர்களாக இருப்பவர்களும் படத்தை ஆவலோடு எதிர்பார்த்து உள்ளனர். ரஜினியின் உறவினரும், அவரது ஆஸ்தான இசையமைப்பாளராகவும் மாறிவிட்ட அனிருத், ஜெயிலர் 2 படம் நாளை வெளியாவதை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சென்று அண்ணாமலையாரை வழிபட்டுள்ளார்.
மேலும் எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், ‛‛ தலைமுறை தலைமுறையாக நமக்கு அளவற்ற மகிழ்ச்சி, சிரிப்பு, சிலிர்ப்பூட்டும் தருணங்கள் மற்றும் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத நினைவுகளை அள்ளித் தந்தவர். 76 வயதிலும், 51 ஆண்டுகளாக, இப்போதும் அந்த மாயாஜாலத்தை நிகழ்த்தி சரித்திரத்தை மாற்றி எழுதி வருகிறார்.
நாளை, 172-வது முறையாக மீண்டும் ஒருமுறை திரையரங்குகளில் விளக்குகள் அணைய, வெள்ளித்திரை தீப்பற்றிக் கொள்ள, உங்கள் அனைவரின் வாழ்த்துகளோடு ஒட்டுமொத்த இந்தியர்களின் இதயங்களிலும் வாழும் ஒரு மாமனிதர் மீதான அன்பை இந்த உலகம் மீண்டும் காணப்போகிறது.
ஒரே ஒரு சூரியன். ஒரே ஒரு சந்திரன். ஒரே ஒரு தலைவர். நாளை முதல் ஜெயிலர் 2. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்'' என குறிப்பிட்டுள்ளார்.