தீபாவளி போட்டியில் 4 படங்கள்
2026ம் ஆண்டில் எஞ்சியுள்ள மாதங்களில் சில முக்கியமான படங்கள் வெளியாக உள்ளன. ஆயுத பூஜை, தீபாவளி ஆகிய பண்டிகை நாட்களை முன்னிட்டு சில படங்களின் வெளியீடுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளன. சரியான இடைவெளியில் சில படங்களை வெளியிட முடிவு செய்து அவற்றையும் அறிவித்துள்ளார்கள்.
இந்த வருட தீபாவளி நவம்பர் 8ம் தேதி ஞாயிற்றுக் கிழமை வருகிறது. அதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக நவம்பர் 6ம் தேதி புதிய படங்களை வெளியிடுகிறார்கள்.
சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள 'மூக்குத்தி அம்மன் 2', ஜித்து மாதவன் இயக்கத்தில், சூர்யா, நஸ்ரியா நடித்துள்ள 'சீன்', மு மாறன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள 'அப்பா குட்டி' ஆகிய படங்கள் நவம்பர் 6ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.
மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள 'மூன் வாக்' படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
'அப்பா குட்டி' படம் முதலில் அக்டோபர் 16 வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு தீபாவளிக்குத் தள்ளி வைக்கப்பட்டது. இதனால், இந்த வருட தீபாவளி போட்டியில் இதுவரையில் 4 படங்கள் சேர்ந்துள்ளன. இதில் மேலும் படங்கள் சேருமா அல்லது இருக்கும் படங்களில் மாற்றம் வருமா என்பது போகப்போகத்தான் தெரியும்.