பிளாஷ்பேக்: 'சித்ராலயா' கோபுவை சினிமா இயக்குநராக்கிய “காசேதான் கடவுளடா”
சடகோபன் என்ற இயற்பெயரைக் கொண்ட பிரபல சினிமா கதாசிரியர்தான் “சித்ராலயா” கோபு. இயக்குநர் சி வி ஸ்ரீதரும், இவரும் செங்கல்பட்டில் உள்ள “செயின்ட் ஜோசப் உயர்நிலைப் பள்ளி”யில் ஒன்றாகப் பயின்று வந்த பள்ளித் தோழர்கள். பள்ளி நாட்களிலேயே சொந்தமாக மேடை நாடகங்கள் எழுதி, நாயகனாக இயக்குநர் ஸ்ரீதர் நடித்து வந்த காலங்களில், அந்நாடகங்களுக்கான நகைச்சுவைப் பகுதிகளை எழுதியதோடு, ஒரு நகைச்சுவை நடிகராகவும் அதில் நடித்தும் வந்தவர்தான் ஸ்ரீதரின் உற்ற நண்பரான சடகோபன் என்ற 'சித்ராலயா' கோபு. பின்னாளில் ஸ்ரீதருக்கு திரைப்படங்களை இயக்கும் வாய்ப்பு கிட்டியபோது, தனது நண்பரான சடகோபனிடம் தான் இயக்கும் திரைப்படங்களுக்கான நகைச்சுவைப் பகுதியை எழுதித் தருமாறு அவரிடம் கேட்க, அப்படி உருவானதுதான் இந்த சடகோபனின் திரைப்பயணம்.
இயக்குநர் ஸ்ரீதரின் முதல் கலைப்படைப்பான “கல்யாண பரிசு” திரைப்படத்தில் ஆரம்பித்த இவரது கலைப் பயணம், பின்னர் ஸ்ரீதரின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான “சித்ராலயா” தயாரிப்பில் வெளிவந்த “நெஞ்சில் ஓர் ஆலயம்”, “காதலிக்க நேரமில்லை”, “நெஞ்சிருக்கும் வரை”, போன்ற திரைப்படங்களுக்கும் இவர் தொடர்ந்து எழுதி வந்ததால் தனது இயற்பெயரான சடகோபன் என்பதை 'சித்ராலயா' கோபு என மாற்றமும் செய்து கொண்டார். தொடர்ந்து ஸ்ரீதரின் “கலைக்கோயில்”, “கொடிமலர்”, “ஊட்டி வரை உறவு”, போன்ற திரைப்படங்களுக்கு எழுதி வந்த காலகட்டங்களிலேயே “அனுபவம் புதுமை”, “கலாட்டா கல்யாணம்”, “சாந்தி நிலையம்”, “வீட்டுக்கு வீடு”, “மூன்று தெய்வங்கள்”, “சுமதி என் சுந்தரி”, “உத்தரவின்றி உள்ளே வா” என பிற இயக்குனர்களின் வெற்றித் திரைப்படங்களுக்கும் வசனகர்த்தாவாக பணிபுரிந்து வந்தார் 'சித்ராலயா' கோபு.
300க்கும் அதிகமாக அரங்கேற்றம் கண்ட 'சித்ராலயா' கோபுவின் மேடை நாடகமான “காசேதான் கடவுளடா” என்ற மேடை நாடகத்தைக் கண்ட ஏ வி எம் தயாரிப்பு நிறுவனத்தின் அதிபர் ஏ வி மெய்யப்ப செட்டியார், அந்நாடகத்தை திரைப்படமாக எடுக்க தீர்மானித்ததோடு, படத்தை 'சித்ராலயா' கோபுவே இயக்கவும் வலியுறுத்தினார். படத்தை இயக்கத் தயங்கிய 'சித்ராலயா' கோபு, இயக்குநர் சி வி ராஜேந்திரன் இப்படத்தை இயக்கினால் நன்றாக இருக்கும் என்ற தனது விருப்பத்தைச் சொல்ல, பின்னர் நாடகத்தை இயக்கிய அவரே படத்தையும் இயக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டு, படத்தின் இயக்குநரானார். முத்துராமன், லக்ஷ்மி, தேங்காய் சீனிவாசன், மனோரமா, ஸ்ரீகாந்த், வெண்ணிற ஆடை மூர்த்தி, எம் ஆர் ஆர் வாசு, சசிகுமார், ரமாபிரபா, சுருளிராஜன், ஜெய்குமாரி என ஒரு பெரும் நட்சத்திரத் திரளே நடித்திருந்த இத்திரைப்படம்தான் 'சித்ராலயா' கோபு இயக்குநராக அறிமுகமான முதல் திரைப்படம்.
படத்தில் மெட்ராஸ் பாஷை பேசி அதகளப்படுத்தியிருந்த நடிகர் தேங்காய் சீனிவாசன் ஏற்று நடித்திருந்த 'அப்பாசாமி' என்ற கதாபாத்திரத்தை, நாடகத்தில் மிமிக்ரி கலைஞரும், நாடகக் கலைஞருமான ரமணி ஏற்று நடித்திருந்தார். நாடகம் சினிமா வடிவம் பெற்றபோது, இந்தக் குறிப்பிட்ட கதாபாத்திரத்திற்கு நடிகர் நாகேஷ்தான் தேர்வு செய்யப்படுவார் என பலர் நினைத்திருந்தாலும், அந்தக் கதாபாத்திரத்திற்கு தேர்வாகியிருந்தவர் நடிகர் தேங்காய் சீனிவாசன். 'அப்பாசாமி' என்ற அந்த கதாபாத்திரத்திற்கு தனது உடல்மொழியாலும், வசன உச்சரிப்பாலும் அமர்க்களப்படுத்தியிருந்தார் தேங்காய் சீனிவாசன்.
இப்படம் வெளிவந்தபோது, நடிகர் தேங்காய் சீனிவாசனுக்கு சென்னையில் மிகப் பெரிய கட்-அவுட் வைத்து விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு நகைச்சுவை நடிகருக்கு நாயகனுக்கு இணையான கட்-அவுட் வைத்த முதல் திரைப்படமாகவும் அமைந்திருந்ததுதான் இந்த “காசேதான் கடவுளடா”. 1972ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம் வசூல் ரீதியாக மிகப் பெரிய வெற்றியைப் பெற, தொடர்ந்து “அத்தையா மாமியா”, “பெண் ஒன்று கண்டேன்”, “காலமடி காலம்”, “ராசி நல்ல ராசி”, “ஆசைக்கு வயசில்லை”, “தைரிய லக்ஷ்மி” என நிறைய படங்களை இயக்கும் வாய்ப்பினையும் பெற்றார் 'சித்ராலயா' கோபு.