உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / எனக்கு கிடைக்கும் பாராட்டை ஒட்டுமொத்த டோரதி குழுவுக்கும் சமர்பிக்கிறேன் : ரிஷிகாந்த்

எனக்கு கிடைக்கும் பாராட்டை ஒட்டுமொத்த டோரதி குழுவுக்கும் சமர்பிக்கிறேன் : ரிஷிகாந்த்

தமிழ் சினிமாவில் 15 ஆண்டுகளாக இருக்கிறார் ரிஷிகாந்த். ஹீரோ, செவப்பி, சில நேரங்களில் சில மனிதர்கள், ரசவாதி, கூலி உட்பட பல படங்களில், குறும்படங்களில், வெப்சீரிஸில் நடித்து இருக்கிறார். ஆனாலும் மொத ராத்திரி பட வெற்றிக்குபின் அவர் பிரபலமாகி இருக்கிறார். தற்போது வெளியாகி உள்ள கார்த்திக் சுப்பராஜின் ‛டோரதி' படத்தில் அவரது நடிப்பிற்கு பாராட்டு கிடைக்கிறது.

ரிஷிகாந்த் கூறுகையில் “ரசிகர்களிடம் இருந்து எனக்கு கிடைக்கு அன்பும் ஆதரவு நான் எதிர்பார்க்காத ஆசீர்வாதம். உலகளவில் பார்வையாளர்கள் இந்தப் படத்தை விரும்புவார்கள் என்ற நம்பிக்கையுடனும், எதிர்பார்ப்புடனும் தான் நாங்கள் அனைவரும் இப்படத்தை உருவாக்கினோம். அதே நேரத்தில், பாராட்டுகளை எதிர்பார்க்கும்போது விமர்சனங்களையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். குறிப்பாக, பரிசோதனை முயற்சிகளைக் கொண்ட திரைப்படங்களுக்கு இது மிகவும் பொருந்தும்.

ஆனால், கார்த்திக் சுப்புராஜ் தனது சிறப்பான திரைக்கதை மூலம் படத்தை இன்னும் சுவாரஸ்யமாக்கியுள்ளார். ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்தன்மையுடன் எழுதப்பட்டிருந்தது. அதுவே பார்வையாளர்கள் படத்துடன் தங்களை உடனடியாக தொடர்புப்படுத்திக் கொள்ள முக்கிய காரணம் எனக் கருதுகிறேன். அனைத்து தரப்பினரும் படத்தை விரும்பியிருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. குறிப்பாக, பெண்கள் என்னைப் பாராட்டி, வாழ்த்துகளைத் தெரிவித்து வருவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

உண்மையைச் சொன்னால், இந்த வெற்றி என்னுடையது மட்டுமல்ல. சனந்த் ஏற்ற கதாபாத்திரமும், அவரது சிறப்பான நடிப்பும்தான் என்னுடைய கதாபாத்திரத்தை மேலும் உயர்த்தியது. கீர்த்தி சுரேஷின் கதாபாத்திரம் இந்தப் படத்தின் மையம். அவரது கதாபாத்திரம் தீர்க்கப்படாத வலி, பாசம் மற்றும் ஏக்கத்தைப் பற்றி ஆழமாகப் பேசுகிறது. அவருக்கு கிடைக்கும் அனைத்து பாராட்டுகளுக்கும் அவர் முழுமையாகத் தகுதியானவர். எனவே, எனக்குக் கிடைத்து வரும் அனைத்து பாராட்டுகளையும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கே நான் சமர்ப்பிக்கிறேன்.

இளையராஜாவின் இசை படத்திற்கு மிகப்பெரும் பலம். ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசு அவர்களின் பங்களிப்பு இந்தப் படத்தின் முதுகெலும்பாக அமைந்துள்ளது. அவரது காட்சியமைப்புகள், படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம். .'டோரதி' ஒரு திரைப்படம் என்பதைத் தாண்டி என்னுள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது வாழ்க்கையை மாற்றக்கூடிய அனுபவம் மட்டுமல்ல, பார்வையாளர்களுக்கும் கண்ணோட்டத்தையும் மாற்றும்” என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !