உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: இயக்குனர் சி.ரங்கநாதன் நடிகராக மாறியது எப்படி

பிளாஷ்பேக்: இயக்குனர் சி.ரங்கநாதன் நடிகராக மாறியது எப்படி


தற்போது காமெடி மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்து வரும் சி.ரங்கநாதனை எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவர் 3 வெற்றிப்படங்களை இயக்கிய தரமான இயக்குனர் என்பது பலருக்கும் தெரியாது. விஜய் நடித்த 'கோயம்புத்தூர் மாப்பிள்ளை', பார்த்திபன், ரச்சனா பானர்ஜி நடித்த 'டாடா பிர்லா', ராம்கி, சங்கவி நடித்த 'ஆஹா என்ன பொருத்தம்' படங்களை இயக்கினார். மூன்றுமே ஓரளவிற்கு வெற்றிப் படங்கள்தான்.

இயக்குனர் ஆர் சுந்தர்ராஜனின் உறவினர் தான் சி.ரங்கநாதன். அந்த சமயத்தில் ஒரு புது நடிகரை ஹீரோவாக்கி வெற்றி படம் கொடுக்கிறேன் எனக்கூறி சவால் விட்டு இவரை நடிகராக மாற்றினார் சுந்தர்ராஜன். அப்படிதான் 'ஒயிலாட்டம்' படத்தில் அறிமுகமானார். தேவா இசை அமைத்தார். ஷர்மிளா, ராதாரவி, அனுமோகன், ஆர்.சுந்தர்ராஜன், உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைக்க வேண்டும் என்று அணுகியபோது தனது பிசியான ஷெட்யூல் காரணமாக அவர் மறுத்து விட்டார். தேவாவின் பாடல்கள் பெரிதாக பேசப்படவில்லை. இதனால் படம் பெரும் தோல்வி அடைந்தது.

அந்த ஒரு படத்துடன் நடிப்பை ஒதுக்கி வைத்துவிட்டு எஸ்.ஏ சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார் ரங்கநாதன். அந்த நட்பின் அடிப்படையில் தான் விஜய்யை வைத்து தனது முதல் படமாக 'கோயமுத்தூர் மாப்பிள்ளை' படத்தை இயக்கினார், இந்த படம் 1996ல் வெளியானது.

அதே வருடத்திலேயே பார்த்திபன், கவுண்டமணி நடித்த 'டாடா பிர்லா' படமும் வெளியானது. 1997ல் ராம்கி, கவுண்டமணி நடிப்பில் இவர் இயக்கிய 'ஆஹா என்ன பொருத்தம்' படம் வெளியானது. இந்த மூன்று படங்களிலுமே கவுண்டமணி ஹீரோவுக்கு இணையாக நடித்திருப்பார். அதனால் காமெடி காட்சிகள் நன்றாக ஒர்க் அவுட் ஆகின.

அதற்கு அடுத்த படமாக ஜெயராம் கவுண்டமணியை வைத்து 'இன்று முதல் ஹேப்பி' என்கிற படத்தை அறிவித்தார். பின்னர் ஜெயராமை மாற்றி விட்டு பாண்டியராஜன் கவுண்டமணியை வைத்து அந்த படத்தை அறிவித்தார். ஆனாலும் மேற்கொண்டு அந்த படம் நகரவில்லை. அதற்கு அடுத்து சில படங்கள் அவர் முயற்சித்தாலும் அதன் பிறகு அவரால் டைரக்ஷனில் ஜொலிக்க முடியவில்லை.

பின்னர் தான் சின்னத்திரை பக்கம் கவனத்தை திருப்பி நடிகராக நடித்து வருகிறார். சினிமாவிலும் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் தற்போது நடித்து வருகிறார் சி ரங்கநாதன். நடிகராக அறிமுகமாக தோல்வியடைந்து பின்னர் இயக்குனராக 3 வெற்றிப் படங்களை கொடுத்தும் மேற்கொண்டு இயக்கத்தில் வாய்ப்பு தள்ளிப்போகவே, மீண்டும் நடிப்பு பக்கம் திரும்பி அதையே இன்றும் தொடர்ந்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !