மண்டாடி வெற்றியை சொந்த ஊரில் கொண்டாடிய சூரி
மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடித்த ‛மண்டாடி' படம் செப்டம்பர் 10ம் தேதி வெளியானது. தமிழ், தெலுங்கில் வெற்றி அடைந்துள்ளது. 10 நாட்களில் இந்த படம் 100 கோடி வசூலை நெருங்கி வருகிறது. கடந்த வாரமே சென்னையில் இந்த பட நன்றி அறிவிப்பை படக்குழு நடத்திவிட்டனர். ஆனாலும், தனது சொந்த ஊரில் உள்ள வீட்டிற்கு படத்தில் வில்லனாக நடித்த சுகாஸ், தயாரிப்பாளர் எல்ரெட் குமார், இயக்குனர் மதிமாறன் புகழேந்தி, நடிகர் பாலசரவணன் உள்ளிட்டோரை அழைத்து சென்று கேக் வெட்டி குடும்பத்தினர் உடன் கொண்டாடி இருக்கிறார் சூரி. அதேபோல், படப்பிடிப்பு நடந்த ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி மக்களுக்கும் விருந்து கொடுத்து இருக்கிறார்.
அடுத்து அயலான் ரவிகுமார் இயக்கத்தில் மீண்டும் கதைநாயனாக நடிக்கிறார் சூரி. வில்லனாக நடித்த சுகாஸ் இந்த பட வெற்றி காரணமாக சூரி உள்ளிட்ட படக்குழுவினரை ஆந்திரா அழைத்து விருந்து கொடுத்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
சூரி கதைநாயனாக நடித்த விடுதலை படம் வெற்றி பெற்றது. கருடன், மாமன் படங்களும் ஓடின. ஆனால், கொட்டுக்காளி பாராட்டும், விருதுகளையும் மட்டுமே வென்றது. இந்நிலையில் மண்டாடி படமும் ஹிட் ஆகியுள்ளது. அந்தவகையில் காமெடியனாக இருந்து ஹீரோ ஆன சந்தானம், சதீஷ், யோகிபாபு ஆகியோர் மார்க்கெட்டை விட சூரி மார்க்கெட் கொஞ்சம் வலுவாக உள்ளது.