உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரூ.46 கோடி மோசடி... : அக்கா அம்பிகா மீது புகார் அளித்த தங்கை ராதா

ரூ.46 கோடி மோசடி... : அக்கா அம்பிகா மீது புகார் அளித்த தங்கை ராதா

80-களில் தமிழ் மட்டுமல்லாது தென்னிந்திய சினிமாவில் கனவுக் கன்னிகளாக திகழ்ந்தவர்கள் சகோதரிகளான அம்பிகா, ராதா. சிவாஜி, ரஜினி, கமல் என டாப் நடிகர்களின் படங்களில் நடித்துள்ளனர். ஒருகட்டத்திற்கு பின்னர் சினிமாவில் இருந்து விலகிய ராதா தனது கணவருடன் இணைந்து ஹோட்டல் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் இறங்கினார். நடிகை அம்பிகா அவ்வப்போது படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் தனது அக்கா அம்பிகா மற்றும் சகோதரர் மல்லிகார்ஜுனா குஞ்சன் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மோசடி புகார் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் அளித்துள்ள புகாரில், ‛‛சென்னை போரூரில் ARS கார்டன் என்ற பெயரில் தொழில் நடத்தி வருகிறேன். தொழில் காரணங்களுக்காக வெளியூர் செல்லும்போது, அவசர பயன்பாட்டிற்காக கையெழுத்திட்ட சில செக்குகளை எனது அறையில் வைத்திருப்பது வழக்கம். 2025ல் ARS கார்டன் RR கார்டன் என பெயர் மாற்றப்பட்டது. மேலும் இதுபற்றி நான் நடத்தி வரும் தொழில் தொடர்பான ஐடிபிஐ வங்கிக்கும் உரிய தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து புதிய செக் புக்கும் எனக்கு அளிக்கப்பட்டது. இதனால் பழைய செக் புக் பயன்பாட்டில் இல்லாமல் போனது.

கடந்த செப்., 17ல் எனக்கு வங்கியில் இருந்து இ-மெயில் வந்தது. அதில் பயன்பாட்டில் இல்லாத எனது பழைய 5 செக்குகள், சுமார் 46 கோடி அளவுக்கு அக்கா அம்பிகா பெயரில் பணமாக்க வங்கியில் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். உடனடியாக அந்த பணபரிமாற்றத்தை நிறுத்த சொல்லிவிட்டேன். இதுபற்றி விசாரித்தபோது அந்த செக்கை பூர்த்தி செய்தது எனது சகோதரர் மல்லிகார்ஜூனா குஞ்சன் என்பது தெரியவந்தது. ஏற்கனவே அவர் மீது ‛பெமா' வழக்கு நிலுவையில் உள்ளது. சென்னை, வளசரவாக்கத்தில் உள்ள எனது வீட்டின் தளைத்தளத்தில் அக்கா அம்பிகா உள்ளார். நான் இல்லாத நேரத்தில் மேல் தளத்தில் உள்ள எனது வீட்டிற்குள் சென்று செக்கை திருடி பண மோசடியில் ஈடுபட இருவரும் முயன்றுள்ளனர். அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு ராதா தெரிவித்துள்ளார்.

ராதா கண்ணீர் பேட்டி

புகார் அளித்த பின் செய்தியாளர்களிம் பேசிய ராதா, ‛‛என்னோட பேர்ல இருந்த செக்கை திருடி, ரூ.46 கோடிக்கு அக்கா அம்பிகா கணக்கில் போட்டுள்ளனர். இதில் எனது தம்பி மல்லிகார்ஜூனாவுக்கும் தொடர்பு உள்ளது. அதுபற்றி புகார் அளித்துள்ளேன். போலீசார் விசாரிக்க உள்ளனர். அக்காவை நம்பி அந்த செக்கை வைத்தேன். இப்படி பண்ணிட்டாங்க. அக்காவ நம்பாமல் வேறு யாரை நம்புவது. இதுபற்றி போன் பண்ணாலும் எடுக்க மாட்றாங்க, அந்த வீட்டுக்குள்ள என்னையும் விடமாட்றாங்க'' என கண்கலங்க தெரிவித்தார்.


எல்லாம் நாடகம் - அம்பிகா

தன் மீது ராதா அளித்த மோசடி புகார் தொடர்பாக நடிகை அம்பிகா வெளியிட்ட அறிக்கை : ‛நிலம், வணிகம் மற்றும் தங்கம் தொடர்பாக எங்களுக்கு சேர வேண்டிய பங்கை ராதா முறைகேடு செய்துள்ளார். இதுதொடர்பான போலீஸ் புகார், கோர்ட்டில் வழக்கு போன்றவை உள்ளன. இந்த உண்மைகளை மறைத்து நாடகமாட முயற்சிக்கிறார் ராதா. இது உண்மைக்கு புறம்பானது'' என தெரிவித்துள்ளார். மேலும் இதுபற்றி செப்., 23ல் காலை 10 மணியளவில் பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறேன் என கூறியுள்ளார் அம்பிகா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !