உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நடிகர் சிவாஜியின் மூத்த மகள் சாந்தி காலமானார்

நடிகர் சிவாஜியின் மூத்த மகள் சாந்தி காலமானார்

மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் - கமலா கணேசன் தம்பதியின் மூத்த மகளும், திரைப்படத் தயாரிப்பாளருமான சாந்தி இன்று (செப்டம்பர் 20) அதிகாலை காலமானார்.

நடிகர் சிவாஜி கணேசன் - கமலா தம்பதியினருக்கு ராம்குமார், பிரபு ஆகிய இரு மகன்களும், சாந்தி, தேன்மொழி ஆகிய இரு மகள்களும் உள்ளனர். அதில் மூத்த மகள்தான் சாந்தி. இவரது பெயரில் தான் சென்னையின் அடையாளமாக விளங்கிய சாந்தி தியேட்டர் மவுண்ட் ரோட்டில் 1961ல் கட்டப்பட்டது. அப்போதைய முதல்வர் காமராஜரால் 1961ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி இத்தியேட்டர் வைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து தஞ்சாவூரில் சிவாஜி குடும்பத்தினர் மூத்த மகள் சாந்தி மற்றும் மனைவி கமலா ஆகியோரின் பெயர்களில் 'சாந்தி' மற்றும் 'கமலா' என இரு தியேட்டர்களை கட்டினர். இத்தியேட்டர் பணிகளை சிவாஜியின் சகோதரர் வி.சி. சண்முகம் கவனித்து வந்தார்.

1968, நவம்பர் 3-ம் தேதி சாந்திக்கும் நாராயணசாமி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. பின்னர் சாந்தி திரைப்படத் தயாரிப்பிலும் ஈடுபட்டார். சிவாஜி கணேசன் நடித்த புகழ்பெற்ற 'தங்கப்பதக்கம்' (1974) திரைப்படத்தின் தயாரிப்பில் இவரது பங்களிப்பு முக்கியமானது. சிவாஜி (2001), கமலா (2007) ஆகியோரின் மறைவுக்கு பிறகு, குடும்பச் சொத்துப் பங்கீடு தொடர்பான விவகாரத்தில் சாந்தி நாராயணசாமி மற்றும் அவரது சகோதரி தேன்மொழி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியது குறிப்பிடத்தக்கது.

சாந்தியின் உடல் அஞ்சலிக்காக வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. சாந்தி நாராயணசாமியின் மறைவுக்குத் திரையுலகினரும், ரசிகர்களும் தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !