திருப்பதி பெருமாளாக நடிக்கும் ரவி மோகன்
எந்த ஒரு நடிகருக்கும் ஒரு படத்திலாவது கடவுள் வேடத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள் மனதில் இருக்கும். எத்தனை வித்தியாசமான வேடங்களில் நடித்து இருந்தாலும் கடவுள் வேடம் என்பது அவர்களுக்கு தனி மரியாதை, மனதிற்கும் திருப்தியாக இருக்கும். தனிப்பிறவி படத்தில் முருகன் கெட்அப்பில் எம்ஜிஆர் வந்திருக்கிறார். சிவன் உட்பட பல கடவுள் வேடங்களில் நடித்து இருக்கிறார் சிவாஜி.
முருகன் என்றாலே சிவகுமார் தான். பல படங்களில் அவர் கந்தனாக வந்து இருக்கிறார். இப்போதுள்ள நடிகர்களுக்கு கடவுள் வேடம் என்பது எட்டாக்கனியாக இருக்கிறது. சூர்யாவும் சில பாடல்களில் முருகனாக வந்துள்ளார். இப்போது ரவிமோகன் முறை. அவர் வட்டி காசலவாட என்ற தெலுங்கு படத்தில் திருப்பதி பெருமாளாக நடிக்கிறார்.
திருப்பதி வேங்கடேசப் பெருமாளைக் குறிக்கும் சொல் வட்டி காசு வாடு என்பதாகும். காசுகளுக்கு உரியவன் அல்லது காசுகளை உடையவன் என்று அர்த்தம். பக்தர்கள் திருப்பதி பெருமாளுக்கு நேர்த்திக் கடனாகக் காணிக்கை (காசு/பணம்) செலுத்துவதாலும், பத்மாவதி தாயாரை மணப்பதற்காக குபேரனிடம் வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்துபவர் என்ற ஐதீகத்தாலும் அவரை அன்போடு வட்டி காசலவாட எனத் தெலுங்கில் அழைப்பார்கள். அதே படத்துக்கு தலைப்பு.
இந்த படத்தில் பிரபல நடிகர் மோகன்பாபு மகன் மனோஜ் மஞ்சு ஹீரோவாக நடிக்கிறார். தேஜ் உப்பலபதி இயக்குகிறார். தலைப்பு இப்படி இருந்தாலும் இது ஆன்மிக படமல்ல, இன்றைய பிரபல இஎம்ஐ தவணை முறைக் கலாச்சாரத்தை மையமாகக் கொண்டு, நடுத்தர வர்க்கத்தினரின் நிதிப் போராட்டங்களை நகைச்சுவையாகவும் பொழுதுபோக்காகவும் கருவாக கொண்டது. ஹீரோ மனோஜ் இறைவனிடம் மன்றாடுவது, பணம் செலுத்த முடியாமல், வட்டி கட்டி முடியாமல் தவிப்பது என கதை செல்கிறது. அந்த படத்தில் ஒரு பகுதியாக பெருமாளாக ரவி மோகன் வருகிறாராம். தெலுங்கில் நேரடியாக ரவி மோகன் நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.