டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ள நானா படேகரின், 'தி கன்பெஷன் ஆப் மேரி'
பாலிவுட்டின் மூத்த நடிகர்கள் நானா படேகர், ஆசிஷ் வித்யார்த்தி மற்றும் ஆதில் ஹூசைன் ஆகியோர் இணைந்து தற்போது நடித்துள்ள படம் 'தி கன்பெஷன் ஆப் மேரி'. இது ஒரு குற்றவியல் திரைப்படமாகும். இப்படம் புகழ்பெற்ற டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட அதிகாரப்பூர்வமாகத் தேர்வாகியுள்ளது. தேசிய விருது பெற்ற இயக்குனர் ஆனந்த் நாராயண் மகாதேவன் இயக்கியுள்ள இப்படம், இந்தியாவில் நடந்த மிகவும் பரபரப்பான உண்மையான வழக்குகளில் ஒன்றான, 1966ம் ஆண்டின் கேரள மடத்தருவி கொலை வழக்கை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் கெளதம் ரோடே, ஜோய் செங்குப்தா, நேஹா மகாஜன், பங்கூரி அவஸ்தி மற்றும் மீனாட்சி மார்ட்டின்ஸ் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பிரபல எழுத்தாளர் சி.பி. சுரேந்திரன் திரைக்கதை எழுத, அமர் மோஹிலே இசையமைத்துள்ளார்.
1966 ஜூன் மாத பின்னணியில் அமைக்கப்பட்ட இக்கதை, கேரளாவின் ரன்னியில் உள்ள மடத்தருவி ஆற்றின் அருகே 43 வயதான விதவையும் 5 குழந்தைகளின் தாயுமான மரியாக்குட்டி என்பவரின் உடல் கண்டெடுக்கப்பட்ட பரபரப்பான சம்பவத்தை மையமாகக் கொண்டது. இறப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு அவர் ஒரு ரோமன் கத்தோலிக்க பாதிரியாருடன் இருந்ததாக நேரில் கண்டவர்கள் கூறிய சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ஒரு வாரத்திற்குப் பிறகு, 37 வயதான பாதிரியார் பெனடிக்ட் ஓனம்குளம் இக்குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார். வேலை வாங்கித் தருவதாகக் கூறி மரியாக்குட்டியை ஏமாற்றியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, மாவட்ட அமர்வு நீதிமன்றத்தால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்தியாவில் கொலைக் குற்றத்திற்காகக் கத்தோலிக்க பாதிரியார் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது அதுவே முதல் முறையாகும். ஆனால் கதை இதோடு முடியவில்லை. அடுத்து என்ன நடக்கிறது என்பதே இப்படத்தின் முக்கியக் கதைக் கருவாகும். டொராண்டோ திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட பிறகு, இதன் திரையரங்க வெளியீட்டு தேதி குறித்த கூடுதல் விவரங்களை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.