பெரிய திரையில் கவனம் செலுத்தும் டீகே
சின்னத்திரை வட்டாரத்தில் 'டீகே' என்று செல்லமாக அழைக்கப்பட்டவர் கார்த்திகேயன். 'கனா காணும் காலங்கள், ஹார்ட் பீட்' உள்ளிட்ட பல தொடர்களில் நடித்தார். ஜி5 ஓடிடி தளத்தில் வெளியான 'ஐந்தாம் வேதம்' தொடரிலும் நடித்தார். தற்போது பெரிய திரையில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “நான் பெரிய நட்சத்திரமாக வேண்டும் என்று ஒருபோதும் அவசரப்படுவதில்லை. சரியான நேரத்திற்காகக் காத்திருந்து, சரியான வாய்ப்புகளைத் தேர்வு செய்து, உண்மையிலேயே எனக்கு சவாலாக இருக்கும் கதாபாத்திரத்திற்காக காத்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். வெறும் கவனத்தைப் பெறுவதற்காக அவசரப்படுவதைவிட, படிப்படியாக வளர்வதையே விரும்புகிறேன்.
வெறுமனே திரையில் வந்துபோகும் கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்காமல், ஒரு நடிகராக என்னுள் இருக்கும் வெவ்வேறு பரிமாணங்களை வெளிக்கொண்டு வரக்கூடிய சவாலான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்க விரும்புகிறேன். இரண்டு படங்களில் கமிட்டாகி உள்ளேன். அதில் ஒன்றில் நாயகனாக நடிக்கிறேன். தயாரிப்பு தரப்பிலிருந்து இதற்கான அறிவிப்புகள் வரும்” என்கிறார் கார்த்திகேயன்.