உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தமிழ் சினிமா எனக்கு மிகவும் ஸ்பெஷலானது, அடுத்து பிரேம் உடன் ஒரு படம் : பஹத் பாசில்

தமிழ் சினிமா எனக்கு மிகவும் ஸ்பெஷலானது, அடுத்து பிரேம் உடன் ஒரு படம் : பஹத் பாசில்

நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் உருவான பெத்லகேம் குடும்ப யூனிட் படத்தை பிரபல நடிகர் பஹத் பாசில் தயாரித்து உள்ளார். படம் குறித்து அவர் பேசியது....

துரதிர்ஷ்டவசமாக நிவினும், மமிதாவும் இங்கே வர முடியவில்லை. நிவின் ஐதராபாத்தில் தனது புரமோஷனை முடித்தார், ஆனால் விமானம் தாமதமாகிவிட்டது. மமிதாவின் உடல்நிலை சரியாக இல்லை. எனவே, முதலில் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

'பெத்லகேம் குடும்ப யூனிட்', இது மிகவும் சிறப்பான ஒரு திரைப்படம். தயாரிப்பாளர்களாக நானும், திலீஷும், ஷியாமும் எங்கள் பயணத்தை 2018-ல் தொடங்கினோம். இது எங்களின் எட்டாவது படம். நாங்கள் எப்போதும் எங்களுக்கு மிகவும் நெருக்கமான, எங்களுக்கு ஸ்பெஷலாக தோன்றும் திரைப்படங்களையே தயாரித்து வருகிறோம். இந்த படமும் அதில் ஒன்று. ​மீண்டும் எனது குழுவுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். இந்த அழகான படத்திற்காக இயக்குனர் கிரீஷுக்கு நன்றி.

படத்தைப் பாருங்கள். இது மிகவும் ஸ்பெஷலான, அழகான படம். தமிழ் ரசிகர்கள் எப்போதும் நல்ல சினிமாவை கொண்டாடுபவர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். இந்தப் படத்தையும் அவர்கள் கொண்டாடுவார்கள் என்று நம்புகிறேன். உலகம் முழுவதும் இதன் மலையாள பதிப்புக்கு மிகச் சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது. அது கூடுதல் உற்சாகத்தை அளிக்கிறது. என்னுடைய அடுத்த தமிழ்ப்படம், மெய்யழகன் பிரேம் உடன் பண்ணுகிறேன். டிசம்பரில் வெளியாகும். அடிப்படையில் இந்த நிறுவனம் எனது நண்பர்களுடன் தொடங்கியது. இப்போது படம் பார்க்கிறவர்களும் நண்பர்கள்தான். படம் பார்ப்பவர்களும் அந்த நண்பர்கள் வட்டம்தான்.

இந்தப்படத்தின் மிகப்பெரிய பலம் இயக்குனர் கிரீஷ் ஏ.டி. அவர் பேசவே மாட்டார். அதனால்தான் அவர் படங்கள் எடுக்கிறார். ​ 'பிரேமலு' படத்திற்குப் பிறகு எங்களிடையே ஒரு நல்ல நட்பு உருவானது. அதனால் அவருக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று நினைத்தோம். அவரது பயணத்தில் ஒரு பகுதியாக இருக்க விரும்பினோம். மற்றபடி ஸ்கிரிப்ட் கேட்டுவிட்டு பண்ண வேண்டும் என்றெல்லாம் எதுவும் இல்லை. அவரது பயணத்தில் ஒரு பகுதியாக இருக்க விரும்பினோம், அவ்வளவுதான்.

​தமிழ் மற்றும் தமிழ் சினிமா எனக்கு மிகவும் ஸ்பெஷலானது. ஏனென்றால் என் தந்தை பாசில் இங்கே பணிபுரிந்துள்ளார். அவர் பல அருமையான திரைப்படங்களை உருவாக்கியுள்ளார். அதனால் தமிழ் எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் நெருக்கமானது.

இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !