உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பெயின்டராக இருந்து கதைநாயகன்: சூரி நடித்த டாப் 10 காமெடி படங்கள்

பெயின்டராக இருந்து கதைநாயகன்: சூரி நடித்த டாப் 10 காமெடி படங்கள்


மதுரையை அடுத்த ராஜாக்கூரில் பிறந்தவர் சூரி. 7வது வரை மட்டுமே படித்தவர், ஆரம்பத்தில் திருப்பூர் பனியன் கம்பெனியில் தினமும் ரூ.20 சம்பளத்துக்கு பணியாற்றி இருக்கிறார். சின்ன வயதில் இருந்தே சினிமா ஆசை மனதில் இருந்ததால், தனது நண்பனும், பாரதிராஜா உதவியாளருமான வெற்றிவீரன் அழைப்பில் சென்னை வந்து வாய்ப்பு தேடியிருக்கிறார். தினமும் ஆடிசன், கம்பெனி, கம்பெனியாக ஏறி இறங்கினாலும் சூரிக்கு உடனடியாக நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

லாரி கிளீனர், பெயின்டர் போன்ற வேலைகளை செய்து இருக்கிறார். 'மந்திரவாசல், சின்னபாப்பா' போன்ற சீரியல்களில் சின்ன, சின்ன ரோலில் நடித்திருக்கிறார். சினிமாவில் 'காதல்' படத்தில் விடுதியில் தங்கியிருப்பவராக, 'வர்ணஜாலம்' படத்தில் திருடனாக, 'ஜி' படத்தில் கல்லுாரி மாணவராக, நடித்து இருக்கிறார். 'வின்னர், தீபாவளி' படத்திலும் சின்ன வேடம். இப்படி நடித்தவருக்கு 2009ம் ஆண்டு வெளியான 'வெண்ணிலா கபடி குழு' பெயர் வாங்கிக்கொடுத்தது. அதில் அவரின் பரோட்டோ காமெடி ஹிட் ஆக, பரோட்டோ சூரி ஆனார். அடுத்து பல முன்னணி நடிகர்களுடன் காமெடியில் கலக்கினார். 'விடுதலை' படத்தின் மூலம் கதைநாயகன் ஆனார். அடுத்து 'கொட்டுக்காளி, கருடன், மாமன்' படங்களிலும் கதைநாயனாக நடித்தார். அவர் ஹீரோவாக நடிக்க பெரிய பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் 'மண்டாடி' செப்டம்பர் 10ல் வெளியாக உள்ளது. சூரி காமெடியனாக நடித்த படங்களில் ரசிகர்களால் சிரித்து ரசிக்கப்பட்ட டாப் 10 படங்கள்:

1) வெண்ணிலா கபடி குழு: சுசீந்திரன் இயக்கிய இந்த படத்தில் நாங்க போட்டிக்கு வரலாமா என கேட்கும் பரோட்டோ காமெடி தொடங்கி, கபடி போட்டி, கிராமத்து காமெடிகள் பிரபலம்.

2) வருத்தப்படாத வாலிபர் சங்கம்: சிவகார்த்திகேயன் , சூரி கூட்டணிக்கு எப்போதுமே வரவேற்பு உண்டு. இதில் பஞ்சாயத்து சீன், கிராமத்து சீன்களில் சூரி காமெடி பிரபலமானது.

3) ரஜினிமுருகன்: சிவகார்த்திகேயன் நண்பனாக வந்து சிரிக்க வைத்து இருப்பார். குறிப்பாக, அந்த டீக்கடை, வாழைப்பழ காமெடி வெடிச்சிரிப்பு.

4) சீமராஜா: சிக்ஸ் பேக்ஸ் வைத்து சூரி நடித்த படம். சிவகார்த்திகேயன், சமந்தா காதல் சீன்களில் சூரி காமெடி செட்டாகி இருக்கும்

5) வேலைன்னு வந்திட்டா வெள்ளக்காரன்: விக்ரம் பிரபு நடித்த இந்த படத்தில் ரோபோசங்கர், சூரி காம்பினேசன் காமெடி அட்டகாசம்.

6) அரண்மனை2: சுந்தர்.சி இயக்கிய இந்த படத்தில் கோவை சரளாவுடனான சீன் மற்றும் பேய் சீன்களில் சூரி காமெடி பொருத்தமாக இருந்தது.

7) கேடி பில்லா கில்லாடி ரங்கா: சிவகார்த்திகேயன் நண்பராக வந்து ரவுசு பண்ணுவார். தேர்தல் காமெடிகள் மக்களிடம் போய் சேர்ந்தன.

8) பாண்டியநாடு: விஷால் நடித்த இந்த படத்தில் அவர் நண்பராக வந்து, பல இடங்களில் தனக்கே உரிய ஸ்டைலில் கலாய்த்து, கவுண்டர் போட்டு இருப்பார் சூரி.

9) நெஞ்சில் துணிவிருந்தால்: இந்த படத்தில் பாரில் குடிக்கும் சூரி, அனைவரையும் அமைதியாக்கிவிட்டு, மனைவியுடன் போனில் பேசும் காட்சி சிரிப்பை வரவழைத்தது.

10) தேசிங்கு ராஜா: எழில் இயக்கிய இந்த படத்தில் ஹீரோயின் பிந்துமாதவியின் மாமாவாக வந்து, ஹீரோ விமலுடன் சேர்ந்து பல இடங்களில் நகைச்சுவையில் ஸ்கோர் செய்து இருப்பார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !