உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தில்லு முல்லு படத்துல சவுகார் ஜானகி செய்த காமெடி : விஜி சந்திரசேகரின் மலரும் நினைவுகள்

தில்லு முல்லு படத்துல சவுகார் ஜானகி செய்த காமெடி : விஜி சந்திரசேகரின் மலரும் நினைவுகள்

மறைந்த நடிகை சவுகார் ஜானகி குறித்தும், அவருடன் நடித்த அனுபவங்கள் குறித்தும் பலர் தொடர்ந்து பேசி வருகிறார்கள். அந்தவகையில் சவுகார் ஜானகி காமெடியில் கலக்கிய தில்லு முல்லு படத்தில் அவருடன் நடித்த விஜி சந்திரசேகர் அளித்த பேட்டியில் சவுகார் ஜானகி நடித்த படங்களின் மிகவும் வித்தியாசமானது தில்லு முல்லு. பல படங்களில் ஹோம்லியான கேரக்டரில் நடித்தவர் இந்த படத்தில் பக்கா காமெடியில் பின்னி எடுத்திருப்பார். தில்லு முல்லு படத்தில் அவருடன் இணைந்து நடித்த விஜி சந்திரசேகர் கூறியது...

நான் நடித்த முதல் படம் 'தில்லு முல்லு'. ஸ்கூலில் படித்தபோது அந்த படத்தில் நடித்தேன். அந்த படத்தில் என்னோட பர்ஸ்ட் ஷாட்டே அவங்களோட தான். மத்த படத்துல அவங்க சோகமான ஆளா ஒரே மாதிரி நடிச்சாங்க. அப்படியே அதை மாத்துன படம் தில்லு முல்லு. இயக்குனர் கே.பாலசந்தர் அப்படி மாற்றினார். அந்த படத்தில் அவங்க மீனாட்சி துரைசாமி என்ற கேரக்டரில் பின்னி எடுத்தாங்க. அந்த படத்தில் நடித்தது என் பாக்கியம்.

தேங்காய் சீனிவாசன் அங்கிள், ரஜினி சார், நான் என நாலு பேரும் ஒரு ஷாட்ல வருவோம். நான் பாவாடை சட்டை தாவணியில் சின்னப் பொண்ணாக இருப்பேன். இப்பவும் நல்லா நினைவு இருக்கிறது. சென்னை அடையார்ல ஒரு நடிகையின் வீட்டுல அந்த சீனை எடுத்தாங்க. ஐயம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள்னு நான் சவுகார் அம்மாவுக்கு நடிக்க சொல்லி கொடுப்பேன். ஒரு காட்சியில நான் செத்தேன்னு அப்படியே சேர்ல கவுந்துருவாங்க. அந்த நடிப்பை யூனிட்டே ரசித்தது. நான் வந்து முருகன் இல்லை, நான் வந்து பிள்ளையார் வேஷத்துல இருக்கும் முருகன் என்ற ரீதியில் பேசுவாங்க, செம சிரிப்பு வரும்.

அப்போ அவங்களுக்கே சிரிப்பு தாங்க முடியாம அந்த முந்தானை எடுத்துட்டு வாயில வச்சுப்பாங்க. நீங்க அந்த ஷாட்டை வேணா பாருங்க. அப்படியே இருக்கும். அந்த காமெடி சீன் பிரபலமானது. இப்பவும் அந்த படம், அந்த சீன் பார்த்தால் அவ்வளவு ரசிப்பேன். அவங்க சமையல் பண்ணுவதில் எக்ஸ்பர்ட். அதிகாலை 3 மணிக்கே எழுந்து எல்லாருக்கும் சமைச்சுகிட்டு, கேரியர் கட்டிக்கிட்டுதான் ஸ்பாட்டுக்கு வருவாங்கன்னு கேள்விப்பட்டு இருக்கேன். அப்படி ஆசையாக சமையல் செய்ததை யூனிட் இருக்கிற அத்தனை பேருக்கும் ஆசையாக குடுப்பாங்க. அதைநான் கொஞ்சம் பாலோ பண்ணுறேன்.
நானும் அவ்வப்போது படப்பிடிப்புக்கு சாப்பாடு கொண்டு போறேன். நாம சாப்பாடு பரிமாறுற விஷயத்துல ரொம்ப ஆத்மார்த்தமா, அவ்வளவு அன்போட, பாசத்தோட சர்வ் பண்ணனும்னு சொல்லுவாங்க. அவங்களை மேட்ச் பண்ற மாதிரி யாரும் இல்லை. அந்த லெகசி, அந்த ஸ்டைல் வேறு யாருக்கும் இல்லை. அவங்க பேர்லயே 'சவுகார்' என்பது இருக்கிறது. 'ஷாவுக்கார்'னா என்றால் கோடீஸ்வரி என அர்த்தம் ராமாராவ் நடிப்பில், எல்.வி. பிரசாத் இயக்கிய படம் அது அவங்க அந்த படத்துல அறிமுகம் ஆனதால் சவுகார் ஜானகி என பெயர் பெற்றார்.

அதுக்கப்புறம் அவருடன் நான் நடிக்கலை. நான் காலேஜ் படிப்புக்குப் போயிட்டேன். சில வருஷங்களுக்கு முன்னாடி அவரை பார்த்தோம், அவங்க கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்குனப்போ, ஏய்! வா வா வா வானு ஹக் பண்ணிக்கிட்டு, I am so happy for you. You married a Captain and you have two daughters, I heard. என்றார். அவங்க நடித்ததில் பிடிச்ச படங்கள் 2. 'இரு கோடுகள்', பாமா விஜயத்தில் இன்னொரு வகை நடிப்பில் கலக்கி இருப்பாங்க. இனிமே அப்படி ஒரு நடிகை பிறக்கவே மாட்டாங்க, அவங்கள யாராலும் காப்பி கூட அடிக்க முடியாது'' என்கிறார்.

மறைந்த இயக்குனர் கே. பாலச்சந்தரிடம் பல ஆண்டுகள் உதவியாளராக இருந்தவர் மோகன். சவுகார் ஜானகி குறித்து பேசுகையில் ''பாலசந்தர் இயக்கிய முதல் படமான நீர்குமிழியில் சவுகார் ஜானகி தான் ஹீரோயின். அவர் இயக்கிய இருகோடுகள் படத்திலும் நடித்தார். அந்த படம் அவர் வாழ்க்கையில் முக்கியமான படம். தமிழ் சினிமாவிலும் கூட. ஒரு கட்டத்துல சவுகார் சொந்த படம் தயாரிக்க முன் வந்தார். அப்ப, எனக்கு ஒரு படம் பண்ணுங்கனு சொல்லி, அவங்களுக்காக பாலசந்தர் எழுதின கதை காவியத்தலைவி. அதுல அவங்களுக்கு டபுள் ரோல். பாலசந்தரின் 'தில்லு முல்லு', 'அழகன்'...என பல படங்களில் நடித்தார்.

பாலசந்தர் சார் மீது சினிமாவில் எல்லாருக்கும் மரியாதை. அவர் இருந்தால், அவர் செட்டுக்கு வந்தால் எல்லாம் பயப்படுவாங்க, மரியாதை கொடுப்பாங்க. ஆனா பாலசந்தர் சாரே இந்த அம்மாக்கு பயங்கர ரெஸ்பெக்ட் குடுப்பாரு. அளவுக்கு அதிகமான ரெஸ்பெக்ட் கொடுப்பார். அந்த அம்மா படப்பிடிப்புக்கு வருகிறார் என்றால் பாலச்சந்தர் பரபரப்பாகிடுவார். எல்லாம் சரியா இருக்க வேண்டும் என்ற முதல் நாளில் ஏற்பாடுகளை செய்வார். அந்த அம்மா ரொம்ப நேர்மையா இருப்பாங்க. சரளமா இங்கிலீஷ் பேசுவாங்க. அவங்க கிட்ட ஒரு நல்ல குணம் உண்டு. வீட்டில் உணவு சமைத்து எடுத்துட்டு வந்து எல்லாருக்கும் கொடுப்பாங்க. அழகன் படத்தில் மதுபாலா பாட்டியாக நடித்தார். நானும் அந்த படத்தில் அவருடன் நடித்தது பாக்கியம்.

அந்த அம்மாகிட்ட நாம் பேசுனோம்னா இங்கிலீஷ்லதான் பதில் சொல்லுவாங்க. மெழுகுவர்த்தி என்ற ஒரு நாடகத்தை பாலசந்தர் எழுதினார் அதில் சவுகார் ஜானகி முக்கியமான வேடத்தில் நடித்தார் அதை பார்த்து எம்ஜிஆர் படமாக்க நினைத்தார், சினிமாவிலும் சவுகாரை நடிக்க வைக்கலாம் என்றார். ஏனோ பாலச்சந்தர் அந்த நாடகத்தை படமாக்கவே இல்லை. பாலசந்தரின் பல படங்களில் சவுகார் ஜானகி நடித்தார். அவரை போன்ற ஒரு கம்பீரமான அழகான அழகு சிலை போன்ற ஒரு நடிகை பார்க்கவே முடியாது. பாலசந்தர் மகன் மறைந்தபோது, அவர் வீட்டுக்கு வந்து துக்கம் விசாரித்தார் சவுகார். அவர் குடும்பத்தில் ஒருத்தர் மாதிரி பாசமாக இருந்தார்' என்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !