உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பாமக நிறுவனர் ராமதாஸ் படம் நின்றது ஏன்? சேரன் சொன்ன புது தகவல்

பாமக நிறுவனர் ராமதாஸ் படம் நின்றது ஏன்? சேரன் சொன்ன புது தகவல்


பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்க்கை வரலாறு சினிமாவாக எடுக்க திட்டமிட்டிருந்தார் இயக்குனர் சேரன். ஆனால் இந்த திட்டம் ரத்தானது. அது குறித்து சென்னையில் நடந்த 'ஒன்' என்ற பட விழாவில் சேரன் மனம் திறந்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது: ராமதாஸ் வாழ்க்கை வரலாறு சினிமா கடைசியில் எடுக்கப்படவே இல்லை! அது பெரிய உழைப்பு. கிட்டத்தட்ட ஒரு இரண்டு வருஷம் இருந்திருக்கும், அந்த உழைப்பு பாழாச்சு. என்னோட உழைப்பு மட்டும் கிட்டத்தட்ட ஒன்றரை வருஷம் இருந்திருக்கும். கிட்டத்தட்ட ஒரு 15 பேரு அதுக்காக பணியாற்றினோம். டீம் எல்லாம் போய் இடம் பார்த்து, லொகேஷன் பார்த்து, எங்கெங்கயோ அலைஞ்சு, காடு, மேடெல்லாம் அந்த ஊரைக் கண்டுபிடிச்சோம். ஏன்னா அது 1987 காலகட்ட வரலாறு.

​87ல இருந்து நடந்த விஷயத்தைப் பூரா பதிவு பண்ணணும்.. இப்ப போனா எல்லா இடத்துலயும் 2026 அடையாளம்; 87 ஆண்டு ஊரை, வில்லேஜை எங்கே தேடுறது? ஆனா தமிழ்நாடு முழுக்க நாங்க அலைஞ்சு அந்த மாதிரி வில்லேஜையும், அந்த மாதிரி ரோடுகளையும், அந்த மாதிரி கண்டுபிடிச்சோம். ஆட்களைப் பூரா கண்டு பிடித்தோம். அப்ப உள்ள ஆட்களோட தோற்றமே வேற. இப்ப அப்படி ஆளே இல்லை, முகமே இல்லை, முழுசும் மாறி இருக்கு.

​அதை நாங்க ரெபரன்ஸ் வச்சு வச்சு அவ்வளவு வேலை பார்த்தோம். ஒன்றரை வருஷம் நாங்க அதுக்கான ஆராய்ச்சி பண்ணிப் பண்ணிப் பண்ணி அவ்வளவையும் திரட்டி வச்சதுக்கப்புறம் அந்தப் படம் நடக்கலை. அது எவ்வளவு பெரிய வலி பாருங்க! 'உங்களுக்கு வேலை பார்த்த வரைக்கும் சம்பளம் கொடுத்துட்டேன்'என சொன்னாங்க. சம்பளம் முக்கியமில்ல. எங்களோட எண்ணம், நாங்க நினைச்சது, நாங்க கற்பனை பண்ணது, எங்களோட மண்டைக்குள்ள ஊறி அந்தக் கதை வெளில வந்துச்சுன்னா எனக்குச் சம்பளமே கிடைக்காட்டிகூட நான் கவலையே படமாட்டேன்.

​ஏன்னா நான் அப்படிப்பட்ட ஒரு பைத்தியக்காரத்தனமான இயக்குனர். நான், நாம் எடுத்த படம் வெளியே வரணும். ஆனா அது வரல. அது நின்றுச்சு. என்ன காரணம்னு கேட்டா, அப்பன்-மகன் சண்டை போட்டாங்க, படம் நின்னு போச்சு என்றார்கள். இப்ப அப்பன்-மகன் சேர்ந்துட்டாங்க படம் எடுக்கிற ஆள் இல்லை, என்ன பண்றது? (சிரிப்பு). ​இதுதான் அவலம். அது மாதிரிதான் சினிமா வந்து எங்கே நம்மளத் தூக்கிட்டுப் போகும், எங்கே நம்மள ஏமாத்தும், எங்கே நம்மள உட்கார வைக்கும்னு தெரியாது. இவ்வாறு பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !