செல்போனை அதிகம் பயன்படுத்தியதால் கழுத்து அறுவை சிகிச்சை செய்து கொண்ட நடிகை ஷகீலா
நடிகை ஷகீலா தற்போது திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு, சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களிலும் தனக்கென நடத்தும் யுடியூப் சேனலிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு கழுத்து அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இதற்கான காரணம் என்ன என்கிற தகவலை தனது யுடியூப் சேனல் மூலமாக ஒரு எச்சரிக்கையாகவே பதிவிட்டுள்ளார் ஷகீலா.
இது குறித்து அவர் கூறும்போது, நான் படுக்கையில் ஒரு பக்கமாக சாய்ந்து கொண்டு தொடர்ந்து பல மணி நேரம் செல்போனில் கேம் விளையாடுவதையும் ரீல்ஸ் பார்ப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தேன். இதனால் கழுத்தின் முக்கிய நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதற்கு கிட்டத்தட்ட 3 லட்சம் ரூபாய் செலவானதுடன் அதிக வலியையும் வேதனையையும் நான் அனுபவித்தேன்.
சிகிச்சை முடிந்தும் கூட படுக்கையில் இருந்து எழுவதற்கும் உணவு அருந்துவதற்கும் பிறரின் உதவி தேவைப்படும் நிலையில் இருக்கிறேன். அதனால் செல்போனை பயன்படுத்துபவர்கள் தேவைக்கு அதிகமாக பயன்படுத்த வேண்டாம். குறிப்பாக, குழந்தைகள் செல்போனை பயன்படுத்தும் போது அதை கவனத்துடன் பெற்றோர் கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.