நான்கு வருட இடைவெளியில் மீண்டும் பயோபிக் படத்தில் மாதவன்
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் 2கே பெண்களை அதிகம் கவர்ந்தவர் நடிகர் மாதவன். அவருக்கு தமிழ் சினிமாவில் இருந்த வரவேற்பை அப்படியே தக்க வைத்துக் கொள்ளாமல் ஹிந்திப் பக்கம் அதிகம் நடிக்க விரும்பி அப்படி போய்விட்டார்.
'அலைபாயுதே' வெற்றிக்குப் பிறகு 'மின்னலே, ரன், அன்பே சிவம், தம்பி, யாவரும் நலம், மன்மதன் அம்பு, வேட்டை, இறுதிச் சுற்று, விக்ரம் வேதா, ராக்கெட்ரி' ஆகிய படங்கள் அவரது நடிப்பைப் பற்றிப் பேச வைத்த படங்களாக அமைந்தன.
இடைவெளி விட்டு இடைவெளி விட்டு தமிழ் சினிமா பக்கம் வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். 2022ல் அவர் இயக்கி நடித்து வெளிவந்த 'ராக்கெட்ரி' படம் அந்த ஆண்டின் சிறந்த படத்திற்கான தேசிய விருதைப் பெற்றது.
விண்வெளி அறிஞர் நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து அந்தப் படம் உருவானது. நாளை மாதவன் நடித்து வெளியாக உள்ள 'ஜிடிஎன்' படம் பல கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரரான ஜிடி நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றுப் படமாக வெளிவர உள்ளது.
இப்படத்திலும் மாதவன் மிகச் சிறப்பாக நடித்துள்ளதாக இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற பத்திரிகையாளர் காட்சியில் பாராட்டப்பட்டுள்ளது. 'ராக்கெட்ரி' போலவே இந்த 'ஜிடிஎன்' படமும் தேசிய விருதைப் பெறும் அளவிற்கு இருக்குமா என்பது நாளை ரசிகர்கள் பார்த்த பிறகு தெரிய வரும்.