மகள் பட ரிலீஸூக்கு முன்பே இயக்குனருக்கு கோல்ட் வாட்ச் பரிசளித்த மோகன்லாலின் மனைவி
நடிகர் மோகன்லாலின் மகள் விஸ்மயா, தனது அப்பா மற்றும் தனது அண்ணன் பிரணவ் வழியைப் பின்பற்றி தானும் சினிமாவில் ஒரு நடிகையாகத் திரையுலகில் நுழைந்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வசூலைக் குவித்த '2018' என்கிற படத்தை இயக்கிய இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கியுள்ள 'தொடக்கம்' என்கிற படத்தில் அவர் தற்போது கதாநாயகியாக அறிமுகமாகிறார். இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து வரும் ஓணம் பண்டிகைக்கு படம் வெளியாக இருக்கிறது.
சமீபத்தில் இந்த படத்தின் சிறப்பு காட்சியை மோகன்லால் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் பார்த்து ரசித்தனர். படம் சிறப்பாக வந்திருப்பதை பார்த்து மகிழ்ச்சியடைந்த மோகன்லாலின் மனைவி சுசித்ரா, இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப்புக்கு சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த சுமார் 3.5 லட்சம் மதிப்புள்ள ஒரு விலை உயர்ந்த கைக்கடிகாரத்தைப் பரிசளித்துள்ளார்.
பொதுவாக படம் வெளியாகி வெற்றி பெற்ற பிறகு இது போன்று கார் உள்ளிட்ட பரிசுகள் இயக்குனருக்கு வழங்கப்படுவது வழக்கம். ஆனால் பட ரிலீஸூக்கு முன்பே இப்படி ஒரு விலையுயர்ந்த பரிசை மோகன்லாலின் குடும்பத்திலிருந்து பெற்றதைத் தொடர்ந்து, இந்த அழகான பரிசை என் வாழ்நாளில் நான் பொக்கிஷமாகப் போற்றுவேன் என்று கூறியுள்ளார் இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப்.