பிளாஷ்பேக் : ஒரே படத்தில் இரண்டு எழுத்தாளர்களின் கதை
கே.பாலச்சந்தர் எப்பொழுதுமே திரைக்கதையில் புதுமை செய்கிறவர். அவருடைய புதுமைகளில் ஒன்று 'ஒரு வீடு இரு வாசல்' என்ற படத்தில் இரண்டு எழுத்தாளர்களின் கதையை தனித்தனி படமாக எடுத்து பின்பு அந்த இரண்டு கதைகளையும் ஒன்றாக இணைத்து சொல்கிற ஒரு புதிய பாணியில் படம் செய்தார்.
இதில் முதல் கதை அனுராதா ரமணனின் 'மீண்டும் மீண்டும்' என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டது, இரண்டாவது கதை அனந்து எழுதியதாகும். இரண்டு கதைகளுமே ஆண் ஆதிக்கத்தின்பிடியிலிருந்து விட்டு விடுதலையாக துடிக்கும் இரண்டு பெண்களின் கதை. அதிலிருந்து அவர்கள் எப்படி விடுதலையாகிறார்கள் என்பது கிளைமாக்ஸ்.
இந்தப் படத்தில் வயலின் கலைஞர்களான கணேஷ் மற்றும் குமரேஷ் இசை அமைப்பாளர்களாக அறிமுகமானார்கள். ஏனோ அதற்குப் பின்பு அவர்கள் எந்த படத்திற்கும் இசையமைக்கவில்லை. 38வது தேசியத் திரைப்பட விருதுகளில், ' சமூகப் பிரச்சினை பேசிய திரைப்படத்திற்கான' விருதை இப்படம் வென்றது.