உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கோச்சடையான் ஏஐ ரீ-ரிலீஸ் : தடையை விலக்கிய உயர்நீதிமன்றம்

கோச்சடையான் ஏஐ ரீ-ரிலீஸ் : தடையை விலக்கிய உயர்நீதிமன்றம்

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2014ல் மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் தயாராகி வெளியான படம் கோச்சடையான். சவுந்தர்யா ரஜினிகாந்த் இப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் தொடர்பாக, இப்படத்தை தயாரித்த நிறுவனங்களில் ஒன்றான மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் என்கிற நிறுவனத்திற்கும் நிதி உதவி செய்த அட் பியூரோ அட்வெர்டைசிங் நிறுவனத்திற்கும் கடன் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனால் இப்படத்தின் மொத்த உரிமை ஈராஸ் நிறுவனத்தின் கைவசம் உள்ளது.

இந்த நிலையில் இந்த படம் தற்போது ஏஐ தொழில்நுட்பத்தில் சீரமைக்கப்பட்டு மறுவெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. ஆனால் தங்களது கடன் தொகை திரும்ப செலுத்தப்படாததால் இந்த படத்தின் மறுவெளியீட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என தற்போது நிதியுதவி செய்த நிறுவனம் மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.குமரேஷ் பாபு, தற்போதைய உரிமையாளரான ஈராஸ் இன்டர்நேஷனல் மீடியா நிறுவனத்திற்கு எதிராக மனுதாரர் எந்த ஒரு நிவாரணமும் கோரவில்லை என்பதால், படத்தின் மறுவெளியீட்டை தடையின்றி அனுமதிக்கலாம் என்று தீர்ப்பளித்துள்ளார். இதனால் கோச்சடையான் ரிலீஸ் சிக்கல் முடிவுக்கு வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !