உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தேசப்பற்றிற்கு எடுத்துக்காட்டாக அமைந்த நவீன கால தமிழ் சினிமாக்கள்

தேசப்பற்றிற்கு எடுத்துக்காட்டாக அமைந்த நவீன கால தமிழ் சினிமாக்கள்


தமிழ் சினிமாவில் தேசப்பற்று மற்றும் நாட்டு நலனை முதன்மைப்படுத்தி வெளிவந்த எத்தனையோ படங்கள் உள்ளன. ஆனால் 1990களுக்கு பிறகு அது போன்ற படங்கள் தமிழில் வருவது மிகவும் அரிதாகி விட்டது. ஆனால் அப்படி வந்த படங்கள் அனைத்தும் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. இந்த கால ஜென்ஸி இளைஞர்களையும் உணர்வுப்பூர்வமாக உணர வைத்து, அவர்களை கொண்டாட வைத்த சில படங்கள் பற்றி பார்க்கலாம்.

1. ராணுவ வீரர்களின் தியாகம் :
அமரன் (2024):
மறைந்த இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் உண்மையான வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படம், நாட்டிற்காக எல்லையில் உயிரைத் தியாகம் செய்யும் வீரர்களின் அர்ப்பணிப்பையும் அவர்களின் குடும்பத்தினர் எதிர்கொள்ளும் சவால்களையும் நெகிழ்ச்சியாகக் காட்சிப்படுத்தியது.

துப்பாக்கி (2012):
விடுமுறையில் சொந்த ஊருக்கு வரும் ராணுவ அதிகாரி, நாட்டிற்குள் ஊடுருவும் பயங்கரவாத 'ஸ்லீப்பர் செல்லை' (Sleeper Cells) எப்படி முறியடிக்கிறார் என்பதை விறுவிறுப்பாகக் காட்டிய நவீன தேசபக்தி திரைப்படம்.

விஸ்வரூபம் (2013):
இந்தியாவின் 'RAW' உளவு அமைப்பைச் சேர்ந்த அதிகாரி சர்வதேச அளவிலான பயங்கரவாதச் சதியை முறியடிக்கும் தீவிரமான கதைக் களத்தைக் கொண்டது.

2. பயங்கரவாத எதிர்ப்பு & தேசப் பாதுகாப்பு :

ரோஜா (1992):
காஷ்மீரில் பயங்கரவாதிகளால் கடத்தப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய அதிகாரியைக் காப்பாற்றப் போராடும் மனைவியின் கதைக்கு இடையே, பாரத மாதாவுக்கு ஜே என்ற முழக்கத்தின் மூலம் தேசபக்தியை உணர்ச்சிப்பூர்வமாக வெளிப்படுத்திய திரைப்படம்.

குருதிப்புனல் (1995):
நேர்மையான காவல் அதிகார்கள் இருவர், பயங்கரவாத இயக்கத்தை ஊடுருவி அழிக்கத் தங்கள் சொந்த வாழ்க்கையையும் உயிரையும் தியாகம் செய்வதை உணர்ச்சிகரமாகக் கூறிய படம்.

உன்னைப்போல் ஒருவன் (2009):
சாதாரண குடிமகன் ஒருவன் தேசத்தின் பாதுகாப்பிற்காகவும், பயங்கரவாதத்திற்குப் பலியான அப்பாவி மக்களின் நீதிக்காகவும் களமிறங்கும் நேர்த்தியான திரைக்கதை.

3. சமூகச் சீர்திருத்தம் & லஞ்ச ஒழிப்பு :

இந்தியன் (1996):
சுதந்திரப் போராட்ட தியாகி ஒருவர், நவீன இந்தியாவில் மலிந்து கிடக்கும் ஊழலையும் லஞ்சத்தையும் தன் சொந்த மகனாக இருந்தாலும் பாராமல் தண்டிக்கக் கிளம்புவது, சமூகப் பொறுப்பும் ஒருவகை தேசபக்தியே என்பதை உணர்த்தியது.

ரமணா (2002):
நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் லஞ்சத்தை ஒழிக்க இளைஞர்களை ஒன்றுதிரட்டி அமைக்கும் அமைப்பைப் பற்றிய திரைப்படம்.

4. வரலாற்றுப் பின்னணி & சுதந்திரப் போராட்டம் :

ஹே ராம் (2000):
இந்தியப் பிரிவினையின் போது ஏற்பட்ட மதக்கலவரங்கள் மற்றும் காந்திய கொள்கைகளின் முக்கியத்துவத்தை அரசியல் மதச்சார்பின்மையுடன் ஆராய்ந்த திரைப்படம்.

மதராசப்பட்டினம் (2010):
1947ம் ஆண்டு இந்தியாவின் சுதந்திரப் போராட்டச் சூழலையும் அக்காலகட்ட சென்னையின் அழகையும் பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்ட உணர்ச்சிப்பூர்வமான கதை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !