உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: தயாரிப்பாளராக பி ஆர் பந்துலு.. சிவாஜிக்கு சந்திரபாபு பின்னணி பாடிய ஒரே படம்

பிளாஷ்பேக்: தயாரிப்பாளராக பி ஆர் பந்துலு.. சிவாஜிக்கு சந்திரபாபு பின்னணி பாடிய ஒரே படம்


சமூகம் சார்ந்த அக்கறையோடும், நாட்டுப் பற்றோடும் திரைப்படங்களைத் தயாரித்து, இயக்கி தமிழ் திரைப்படத் துறைக்கும், தமிழ் கூறும் நல்லுலகிற்கும் பெருமை சேர்த்த ஒரு தலைசிறந்த கலை வித்தகராக பார்க்கப்பட்டவர்தான் நடிகர், தயாரிப்பாளர், மற்றும் இயக்குநர் என்ற பன்முகத் தன்மை கொண்ட திரை ஆளுமை இயக்குநர் பி ஆர் பந்துலு. இவரது “வீரபாண்டிய கட்டபொம்மன்”, “கப்பலோட்டிய தமிழன்”, “கர்ணன்” போன்ற திரைப்படங்களே இவரது கலைச்சேவைக்கு சான்றுகளான திரை ஓவியங்கள். அடிப்படையில் பள்ளி ஆசிரியரான இவர், குப்பி வீரண்ணா நாடகக் குழுவில் ஒரு நடிகராக அறிமுகமாகி, நடிப்புத் துறையைத் தேர்ந்தெடுத்தார். 1936ம் ஆண்டு வெளிவந்த “சம்சார நௌகா” என்ற கன்னடத் திரைப்படம்தான் இவரை வெள்ளித் திரையிலும் நடிகராக மின்னச் செய்த முதல் திரைப்படம்.

தொடர்ந்து ஒரு சில கன்னட மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்த பி ஆர் பந்துலு, நடிகர் டி ஆர் மகாலிங்கத்தின் “மச்ச ரேகை”, “மோகன சுந்தரம்”, “சின்னதுரை”, “விளையாட்டு பொம்மை” என நான்கு திரைப்படங்களில் அவரோடு இணைந்து பிரதான கதாபாத்திரங்களில் தோன்றி நடித்திருந்ததோடு, நடிகர் டி ஆர் மகாலிங்கத்தின் சொந்த தயாரிப்பு நிறுவனமான “சுகுமார் புரொடக்ஷன்ஸ்” நிறுவனத்தின் தயாரிப்பு நிர்வாகியாகவும் செயல்பட்டு வந்தார். ஏ வி எம்மின் “நாம் இருவர்” திரைப்படத்தில் அண்ணன் தம்பியாக இவ்விருவரும் இணைந்து நடித்ததிலிருந்து இருவரும் இணை பிரியா நண்பர்களுமாயினர்.
இந்நிலையில் ஒரு நடிகராக மட்டுமே திரைத்துறையில் பயணித்து வந்த பி ஆர் பந்துலு, “பத்மினி பிக்சர்ஸ்” என்ற பெயரில் சொந்தமாக படக் கம்பெனி ஒன்றையும் ஆரம்பித்து, திரைப்படத் தயாரிப்பிலும் ஈடுபட முன்வந்தார். அவ்வாறு அவர் தயாரித்த முதல் திரைப்படம்தான் “கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி”.

சிவாஜி கணேசன், பத்மினி, டி ஆர் ராமச்சந்திரன், ராகினி, கே டி சந்தானம், போன்ற முக்கிய நடிகர்களோடு இணைந்து பி ஆர் பந்துலுவும் நடித்திருந்த இத்திரைப்படத்தின் திரைக்கதை வசனங்களை எழுதி, படத்தை இயக்கியிருந்தார் இயக்குநர் ப நீலகண்டன். பாரதிதாசன் மற்றும் கே டி சந்தானம் எழுதிய பாடல் வரிகளுக்கு இசையமைத்திருந்தவர் டி ஜி லிங்கப்பா. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த இப்படத்தின் பாடல்களில் ஒன்றான “ஜாலி லைப் ஜாலி லைப் தாலிகட்டினா ஜாலி லைப், ஜாலி லைப் ஜாலி லைப் தம்பதியானா ஜாலி லைப்” என்ற பாடல் ரசிகர்களால் அன்று பெரிதும் விரும்பப்பட்ட பாடலாக அமைந்திருந்தது.

சிவாஜி வாயசைத்து அற்புதமாக நடித்திருந்த இந்தப் பாடலைப் பாடியவர் பிரபல நகைச்சுவை நடிகர் ஜே பி சந்திரபாபு. இதன் மூலம் சிவாஜிக்காக நடிகர் சந்திரபாபு பின்னணி பாடியிருந்த ஒரே திரைப்படம் என்ற பெருமைக்கும் உரித்தானது, இந்த “கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி”. 1954ல் தமிழ் புத்தாண்டு வெளியீடாக, பி ஆர் பந்துலு முதன் முதலாக தயாரித்து வெளியிட்ட இந்த “கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி” திரைப்படம், வசூல் ரீதியாகவும் ஒரு நல்ல வெற்றியைப் பதிவு செய்திருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !