ஜிவி பிரகாஷ் படத்தில் இளையராஜா பாடலை பயன்படுத்த தடை
இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் நடிப்பில் கடந்த மார்ச் 27ம் தேதி வெளியான படம் ‛ஹேப்பி ராஜ்'. ஸ்ரீ கவுரி பிரியா, பிரார்த்தனா, அப்பாஸ், மரியம் ஜார்ஜ் உள்ளிட்டோர் நடித்தனர். மரிய ராஜா இளஞ்செழியன் இயக்கினார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்து இருந்தார். சுமாரான வரவேற்பை பெற்றது.
இந்தபடத்தில் ரஜினி நடித்த ‛முரட்டுக் காளை' படத்தில் இளையராஜா இசையமைப்பில் வெளியான ‛பொதுவாக என் மனசு தங்கம்...' என்ற பாடலை பயன்படுத்தி இருந்தனர். தன்னுடைய அனுமதியின்றி பாடலை பயன்படுத்தியதாக கூறி காப்பிரைட் சட்டப்படி இளையராஜா சார்பில் சென்னை, ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் படத்தில் அந்த பாடலை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும், பாடலை நீக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் ‛பொதுவாக எம்மனசு தங்கம்...' பாடலை ஹேப்பிராஜ் படத்தில் பயன்படுத்த நீதிமன்றம் தடை விதித்தது. இதுதொடர்பாக பதிலளிக்கும்படி படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆகியோருக்கு உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கை நான்கு வாரங்களுக்கு தள்ளி வைத்தது.