நாகார்ஜுனாவின் 100வது படத்தில் தபுவின் கதாபாத்திரம் குறித்த புதிய தகவல் வெளியானது!
அகில் அக்கினேனியின் லெனின் படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வின்போது, நாகார்ஜுனா தனது திரையுலகப் பயணத்தின் மைல்கல்லான 100வது படமான 'கிங்100' குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஜூலை 10க்குப் பிறகு வெளியிட்டப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவராத நிலையில், தெலுங்கு சினிமா துறையில் எழுந்துள்ள புதிய செய்திகள் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தி யுள்ளது. சமீபத்திய தகவல்களின்படி, நடிகை தபு இந்த படத்தில் ஒரு வில்லி கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், அவர் நாகார்ஜுனாவுக்கு எதிராக முதன்மை நெகட்டீவ் பாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த காலத்தில் இந்த ஜோடி பல மறக்க முடியாத படங்களில் இணைந்து நடித்திருப்பதால், இவர்கள் மீண்டும் ஜோடியாக நடிப்பார்கள் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இந்தத் தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரா.கார்த்திக் இயக்கும் கிங்-100 படம், ஏழையாக இருந்து பெரும் பணக்காரராக உயரும் ஒரு மனிதனின் கதையை அடிப்படையாகக் கொண்டது என்றும், இதில் தந்தை-மகள் இடையேயான உணர்வுப்பூர்வமான பின்னணி வலுவாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் தயாரிப்பில் கடந்த சில மாதங்களாக உருவாகி வரும் இந்த படத்தில், நாகார்ஜுனா மற்றும் தபுவுடன் இணைந்து சுஷ்மிதா பட் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
ஜூலை 10க்கு பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நாகார்ஜுனா உறுதியளித்துள்ளதால், தபுவின் கதாபாத்திரம் குறித்த இந்தத் தகவல் உண்மையா என்பதை அறிய ரசிகர்கள் தற்போதே பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.