கபடி வீரன் ரவுடி ஆன கதை: 'லிங்கம்' குறித்து கதிர்
லஷ்மி சரவணகுமார் இயக்கும் 'லிங்கம்' வெப்சீரியசில் நடித்து இருக்கிறார் நடிகர் கதிர். 1990களில் நடந்த ஒரு உண்மை சம்பவம் பின்னணியில் இந்த கதை உருவாகி உள்ளது. ஜியோ ஹாட்ஸ்டாரில் நாளை ரிலீஸ் ஆகிறது. இது குறித்து கதிர் கூறுகையில், ''நான் நடித்த 'சுழல்' வெப்சீரிஸ் வெற்றி பெற்றது. அடுத்து இந்த கதை வந்தது.
கிட்டத்தட்ட 4 ஆண்டுகளாக இதை உருவாக்கி வந்தோம். அடிக்கடி நடிகர்கள் மாறினார்கள், நான் கூட மாற்றப்பட்டு விடுவேனோ என நினைத்தேன். அது மட்டும் நடக்கவில்லை. 4 ஆண்டு உழைப்பு என்பது சாதாரண விஷயமல்ல. அத்தனை நாட்களும் அதே எனர்ஜியோடு இந்த சீரிஸை உருவாக்கியிருக்கிறோம்.
1980 மற்றும் 90களின் பின்னணியில், கபடி விளையாட்டு மற்றும் கேங்ஸ்டர் கதையை மையமாகக் கொண்டது. அந்த காலகட்டத்தை அப்படியே திரையில் கொண்டு வந்து இருக்கிறார் இயக்குனர் திவ்யபாரதி மற்றும் பூர்ணிமா ரவி இருவருமே தங்களின் கதாபாத்திரங்களை உணர்ந்து பிரமாதமாக நடித்துள்ளனர். குறிப்பாக, திவ்யபாரதிக்கு 'பேச்சுலர்' படத்திற்குப் பிறகு இது முற்றிலும் மாறுபட்ட, ஒரு பவர்புல்லான கதாபாத்திரமாக இருக்கும். அடுத்து சினிமாவிலும் நடிக்கப்போகிறேன். அது குறித்த அறிவிப்புகள் வரும்'' என்றார்.
வெப்சீரிஸ் குறித்து பேசிய இயக்குனர், ''நிறைய ஆராய்ச்சி செய்து, லிங்கம் சம்பந்தப்பட்ட பலருடன் பேசி இதை உருவாக்கினோம். ஒரு முக்கியமான காட்சியை எடுத்துக்கொண்டிருந்தபோது போஸ் வெங்கட் தாயார் மறைந்துவிட்டார். ஆனாலும், சூழ்நிலை காரணமாக அவர் அதை வெளிகாட்டாமல் நடித்தார். எங்கள் தேவையாக சில நாட்களில் வந்து மீண்டும் நடித்துக்கொடுத்தார்'' என்றார்.