புரமோஷனுக்கு வராத வரலட்சுமி: தெலுங்கு இயக்குனர் குற்றச்சாட்டு
தமிழிலும் நடித்து வந்த வரலட்சுமி சரத்குமார், தெலுங்கிலும் அறிமுகமாகி அங்கும் அவருக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. தெலுங்கில் 'போலீஸ் கம்ப்ளைன்ட்' என்ற ஒரு படத்தில் நடித்துள்ளார் வரலட்சுமி. நாளை ஜூன் 12ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தின் புரமோஷனுக்கு வரலட்சுமி வர மறுக்கிறார் என படத்தின் இயக்குனர் சஞ்சீவ் மெகோட்டி வெளிப்படையாக குற்றம் சாட்டியிருக்கிறார்.
இது குறித்து அவர் பேசுகையில், வரலட்சுமி சரத்குமார் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கினார், ஆனால் படத்தை விளம்பரப்படுத்த அவர் தயக்கம் காட்டுகிறார். படத்தின் முதல் பாதிக்கு டப்பிங் பேசிய அவர், 'சரஸ்வதி' என்ற அவர் இயக்கிய படத்தை முடிப்பதற்காக பாதியிலேயே சென்றுவிட்டார். இரண்டாம் பாதிக்கு டப்பிங் பேசி முடிக்காமல் மூன்று மாதங்கள் எங்களை அவதிக்குள்ளாக்கினார். அவரைப் பொறுத்தவரை எங்கள் படத்திற்கு மிகக் குறைந்த முக்கியத்துவமே உள்ளது. பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு நான் அவரிடம் கெஞ்சிக் கேட்டேன், ஆனால் அது சாத்தியமில்லை என்று கூறிவிட்டார்.
படப்பிடிப்பின் போது அவருக்குக் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதற்காக நான் கதையையே மாற்றியமைத்து, படப்பிடிப்பு முழுவதும் அவருக்குத் துணையாக இருந்தேன். ராம் சரண் போன்ற பெரிய நட்சத்திரங்களும், 94 வயதான சிங்கீதம் சீனிவாச ராவ் போன்றவர்களும் தங்கள் படங்களை விளம்பரப்படுத்த முன்வருகிறார்கள். வரலட்சுமி தனது சம்பள விஷயத்தில் உறுதியாக இருக்கிறார், அதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் இருப்பதன் மூலம், அவர் எங்கள் தொழில் வாழ்க்கையைப் பாதிக்கிறார், என்று தெரிவித்துள்ளார்.