25 ஆண்டுகளை நிறைவு செய்த 'ஆனந்தம்'
சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் லிங்குசாமி இயக்குனராக அறிமுகமாக, மம்முட்டி, முரளி, அப்பாஸ், தேவயானி, ரம்பா மற்றும் பலர் நடிப்பில் 2001ம் ஆண்டு மே 25ம் தேதி வெளியான படம் 'ஆனந்தம்'. இன்றுடன் 25 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
இயக்குனர் லிங்குசாமி அவர்களது குடும்பத்தில் நடந்த சில விஷயங்களை வைத்து இந்த குடும்பப் படத்தை எடுத்தார். அந்தக் கால கட்டங்களில் குடும்பப் படங்களுக்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது.
இப்படம் ஒரு மல்டிஸ்டார் படமாக வெளிவந்தது. மலையாள நடிகர் மம்முட்டி அண்ணனாக நடிக்க அவரது தம்பிகளாக முரளி, அப்பாஸ், ஷ்யாம் கணேஷ் நடிக்க, மம்முட்டி ஜோடியாக தேவயானி, முரளி ஜோடியாக ரம்பா, அப்பாஸ் ஜோடியாக சினேகா நடிக்க பெற்றோர்களாக டெல்லி கணேஷ், ஸ்ரீவித்யா நடித்தனர்.
அண்ணன் தம்பிகளுக்கு இடையில் இருக்கும் பாசம், வீட்டிற்கு வரும் மருமகள்களால் நடக்கும் பிரச்னை என அந்த ஒரு குடும்பத்தைச் சுற்றி நடந்த கதை.
எஸ்ஏ ராஜ்குமார் இசையில், 'ஆசை ஆசையாய் இருக்கிறதே, பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன், என்ன இதுவோ,' ஆகிய பாடல்கள் சூப்பர் ஹிட் பாடல்களாக அப்போது அமைந்தன.
மலையாள நடிகரான மம்முட்டி தமிழில் நடித்து வெளிவந்த படங்களில் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற ஒரு படம்.
அண்ணன், தம்பி கதை என்றாலே இன்றைய இளம் ரசிகர்களுக்கு இந்தப் படம் தான் முதலில் ஞாபகத்திற்கு வரும். இப்படம் வெளிவந்த பின் இதே சாயலில் சில பல படங்கள் வெளியாகின.