உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இளையராஜா குடும்பத்துடன் 50 ஆண்டுகளாக நட்பு தொடர்கிறது: மறைந்த பஞ்சு அருணாசலம் மகன் சுப்பு பஞ்சு பேட்டி

இளையராஜா குடும்பத்துடன் 50 ஆண்டுகளாக நட்பு தொடர்கிறது: மறைந்த பஞ்சு அருணாசலம் மகன் சுப்பு பஞ்சு பேட்டி


'அன்னக்கிளி' படத்தில் இசையமைப்பாளர் ஆக அறிமுகம் ஆனார் இளையராஜா. அந்த படத்தில் பல தடைகளை தாண்டி, அவரை இசையமைப்பாளர் ஆக்கியவர் மறைந்த இயக்குனர் பஞ்சு அருணாசலம். இன்று அன்னக்கிளி வந்து 50 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இளையராஜாவின் 50 ஆண்டுகால இசைப்பயணம் நிறைவு என தமிழகமே கொண்டாடி வரும் நிலையில் பஞ்சு அருணாசலம் மகனும், தயாரிப்பாளர், நடிகருமான சுப்பு பஞ்சுவிடம் பேசினோம்.

அவர் நெகிழ்ச்சியுடன் கூறியதாவது: கடந்த 50 ஆண்டுகாலமாக எங்கள் குடும்பத்துக்கும், இளையராஜா மாமா குடும்பத்துக்குமான உறவு, பாசம், நட்பு தொடர்கிறது. அன்னக்கிளி படத்தில் அவரை அறிமுகப்படுத்தினோம். இப்போது கங்கை அமரன் நடிக்கும் 'லெனின் பாண்டியன்' படத்தில் நான் நிர்வாகி ஆக பணியாற்றுகிறேன். அந்த படத்துக்கும் ராஜா மாமாதான் இசையமைப்பாளர். இது எவ்வளவு பெரிய விஷயம். அன்றைக்கு நேரம் தவறாமையை கடைபிடித்தார். லெனின் பாண்டியன் ரிக்கார்டிங்கிலும் அதே நல்ல பழக்கத்தை தொடர்ந்தார்.

கடந்த 50 ஆண்டுகளாக நல்லது, கெட்டதுகளில் இருவர் குடும்பமும் கலந்து கொள்கிறோம். அப்பாவை அண்ணன் என அழைப்பார் ராஜா மாமா. பல சமயம் அவர்கள் நண்பர்களாகவும் இருப்பார்கள். அன்னக்கிளி தொடங்கி நாங்கள் தயாரித்த 40க்கும் அதிகமான படங்களில் அவர் அல்லது அவர் வாரிசுகளான கார்த்திக்ராஜா, யுவன் மட்டுமே இசையமைத்து இருக்கிறார்கள். நாங்கள் மற்ற இசையமைப்பாளர்களை தேடி செல்லவில்லை.

எந்த பிசியான கால கட்டத்திலும் அப்பாவை அவர் காக்க வைத்தது இல்லை. பல சூழ்நிலைகளில் அப்பாவின் ஆலோசனையை அவர் கேட்டு இருக்கிறார். அப்பா எழுதிய கடைசி பாட்டை கமல் பாடினார், ராஜா மாமா இசையமைத்தார். கவுதம் கார்த்திக் நடித்த 'முத்துராமலிங்கம்' படத்தில் அந்த பாடல் இடம்பிடித்தது. ராஜா மாமாவை மட்டுமல்ல, 'அலெக்சாண்டர்' படத்தின் மூலம் கார்த்திக் ராஜாவையும் நாங்கள் தான் அறிமுகப்படுத்தினோம். அந்த படத்தில் டைட்டில் பாடலை யுவன் உருவாக்கினார். அவரே ஒரு நிகழ்ச்சியில் அதை சொல்லிவிட்டார்.

ஆக இளையராஜா, கார்த்திக்ராஜா, யுவன் சங்கர் ராஜா என 3 பேரையும் அறிமுகப்படுத்தியதில் மகிழ்ச்சி. இப்போது இளையராஜா பேரன், கார்த்திக் ராஜா மகன் யதீஸ்வர் இசையமைப்பாளர் ஆகிவிட்டார். அவரையும் எங்கள் நிறுவனமே அறிமுகப்படுத்த வேண்டும் என விரும்புகிறேன். தேசியவிருது, பத்மபூஷண், ராஜ்யசபா எம்பி என பல கவுரவம் அவருக்கு கிடைத்துள்ளது. ஆனால் இன்னும் தாதா சாகேப், பாரத ரத்னா தரப்படவில்லை. அதுவும் வந்தால் அந்த விருதுக்கு பெருமை. இவ்வாறு சுப்பு பஞ்சு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !