இரண்டு வாரங்களில் 'ஜனநாயகன்' ரிலீஸ் : தயாரிப்பாளர் சொன்ன தகவல்
தமிழக முதல்வராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்ட நடிகர் விஜய் நடித்த கடைசி படம் 'ஜனநாயகன்'. வினோத் இயக்கிய இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கேவிஎன் நிறுவனம் சார்பில் கே.வி.நாராயணன் தயாரித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.
ஜனவரி மாதம் 9ம் தேதி வெளியாக வேண்டிய இப்படம் தணிக்கை சான்றிதழ் சிக்கல் காரணமாக அப்போது வெளியாகவில்லை. அதன்பின் ரிவைசிங் கமிட்டி படத்தைப் பார்த்தது. தற்போது வரையிலும் தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை என்றே தெரிகிறது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு விஜய் தமிழக கவர்னரை சந்தித்த போது 'ஜனநாயகன்' படத்தின் தயாரிப்பாளர் கேவிஎன் வெங்கட் நாராயணன் கூடவே சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. நேற்று விஜய்யின் பதவியேற்பு விழாவிலும் இவர் கலந்து கொண்டார்.
அப்போது அவரிடம் பத்திரிகையாளர்கள் 'ஜனநாயகன்' வெளியீடு குறித்து கேட்ட போது, ‛‛ 'ஜனநாயகன்' ஹீரோ இப்போது முதல்வர் ஆகிவிட்டார். அந்த படம் விரைவில் வெளியாகும். சென்சார் சான்றிதழ் கிடைத்தவுடன் படம் வரும். தணிக்கை வாரியத்துடன் பேசி வருவதாகவும், இன்னும் இரண்டு வாரங்களில் படம் வெளியாகும்'' என்றும் கூறியுள்ளார்.
மே மாதக் கடைசியில் அல்லது ஜுன் முதல் வாரத்தில் படத்தின் வெளியீடு இருக்க வாய்ப்புள்ளது.