அமெரிக்காவில் மனைவியுடன் படம் பார்த்த மோகன்லால்
மலையாளத்தில் மோகன்லால், மம்முட்டி, பஹத் பாசில் என மல்டி-ஸ்டாரர் படமாக உருவான 'பேட்ரியாட்' கடந்த வெள்ளியன்று வெளியானது. மகேஷ் நாராயணன் இயக்கிய இப்படத்தில் நயன்தாரா கதாநாயகனாக நடித்துள்ளார். படம் நல்ல வரவேற்புடன் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. அதேசமயம் படத்தின் நாயகர்களில் ஒருவரான மோகன்லால் தற்போது அமெரிக்காவில் நியூ ஜெர்சியில் கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார்.
இந்த நிலையில், தற்போது நியூ ஜெர்சியில் உள்ள திரையரங்கு ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த சிறப்புக்காட்சி தனது மனைவியுடன் சென்று படத்தைப் பார்த்து ரசித்துள்ளார் மோகன்லால். அங்கிருந்த ரசிகர் ஒருவர் அதை வீடியோவாக எடுத்து, குறிப்பாக மம்முட்டி - மோகன்லால் இருவரும் இணைந்து நடித்த 'சேசிங்' காட்சியின் போது அவரது ரியாக்சன் எப்படி இருக்கிறது என்பதைச் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.