பேட்ரியாட் : முதல் நாள் வசூல்
மகேஷ் நாராயணன் இயக்கத்தில் மம்முட்டி, மோகன்லால், பஹத் பாசில், குஞ்சாக்கோ போபன், நயன்தாரா, ரேவதி மற்றும் பலர் நடிப்பில் நேற்று வெளியான மலையாளப் படம் 'பேட்ரியாட்'.
மலையாளத் திரையுலகத்தின் முக்கிய நடிகர்கள் இணைந்து நடித்துள்ள இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. முதல் நாள் வசூலாக நேற்று உலகம் முழுவதும் சுமார் 29 கோடி வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் சுமார் 11 கோடியும், வெளிநாடுகளில் சுமார் 18 கோடியும் வசூலித்துள்ளதாம். கேரளாவில் மட்டும் முதல் நாள் வசூலாக 8 கோடியே 50 லட்சம் வசூலித்துள்ளதாகத் தகவல். இதன் மூலம் மலையாளப் படங்களில் முதல் நாளில் அதிக வசூலைக் குவித்த இரண்டாவது படமாக அமைந்துள்ளது. முதலிடத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான 'எம்புரான்' படம் இருக்கிறது.
படத்திற்குக் கிடைத்துள்ள வரவேற்பை அடுத்து மோகன்லாலுடன் இணைந்து நிற்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, “அனைவருக்கும் நன்றி,” என மம்முட்டி பதிவிட்டுள்ளார்.