உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'தனுஷ், 3, ஐஸ்வர்யா ரஜினிகாந்த்' பெயர்களை மறந்த அனிருத் !!

'தனுஷ், 3, ஐஸ்வர்யா ரஜினிகாந்த்' பெயர்களை மறந்த அனிருத் !!


தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது, தெலுங்கு, ஹிந்தியிலும் பிரபலமாக இருப்பவர் இசையமைப்பாளர் அனிருத். 2015ல் வெளிவந்த '3' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர்.

'3' படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'ஒய் திஸ் கொலவெறி' பாடல் 2011ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதி யு டியூப் தளத்தில் வெளியானது. அதன்பின் இந்தியாவில் மட்டுமல்லாது உலக அளவிலும் வைரலாகி டிரென்டிங் ஆனது. வட இந்திய செய்தி டிவி சேனல்கள் கூட அது பற்றிய செய்திகளை வெளியிட்டன. அதற்குப் பிறகுதான் யு டியூப் தளத்தின் பக்கம் பலரும் திரும்பிப் பார்த்தனர்.

அந்த நாளை தன்னுடைய அறிமுக நாளாகக் குறிப்பிட்டு நேற்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து அனிருத் ஒரு நீண்ட பதிவை சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தார்.

அதில் அவரது அறிமுகப் படமான '3' படத்தின் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பற்றியோ, 'ஒய் திஸ் கொலவெறி' பாடலை எழுதி பாடிய தனுஷ் பற்றியோ அல்லது '3' படம் பற்றியோ எந்த ஒரு குறிப்பும் இடம் பெறவில்லை. இது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

2026ல் வெளிவந்த 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, ஜனநாயகன், டிசி, பாரடைஸ், ஜெயிலர் 2' ஆகிய படங்களை தனது 15வது ஆண்டின் கொண்டாட்டமாகக் குறிப்பிட்டுள்ள அனிருத் தனது முதல் படத்தின் பாடலான 'ஒய் திஸ் கொலவெறி' பாடலை கொண்டாடியதை குறிப்பிட மறந்தது யதேச்சையானதா அல்லது அதன் பின்னணியில் ஏதும் உள்ளதா என்பது தெரியவில்லை.

'ஒய் திஸ் கொலவெறி' பாடல் யு டியூப் தளத்தில் கடந்த 15 வருடங்களில் 623 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !