உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: மனைவியின் பெருமை பேசிய படம்

பிளாஷ்பேக்: மனைவியின் பெருமை பேசிய படம்

'கணவனே கண்கண்ட தெய்வம்', என்ற கருத்துடன் படங்கள் வெளிவந்து கொண்டிருந்த காலத்தில் 'மனைவியே மனிதனின் மாணிக்கம்' என்ற தலைப்பில் மனைவியை போற்றும் அதிரடி திரைப்படம் உருவானது. 1959ம் ஆண்டு வெளியான இந்த படத்தை கே.வேம்பு இயக்கினார். மக்கள் அன்பன், கோவை ராஜகோபால் கதை, வசனம் எழுதினர், மதனகோபால் நாயுடு தயாரித்தார். தெலுங்கு இசை அமைப்பாளர் ஹனுமந்த் ராவ் இசை அமைத்தார். கே.பாலாஜி, பண்டரிபாய், விஜயகுமாரி, வி.நாகய்யா, எம்.ஆர்.சந்தானம் ஆகியோர் நடித்திருந்தார்கள். நாகேஷ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.

கே.பாலாஜியும், பண்டரிபாயும் கருத்தொருமிக்க கணவன் மனைவியாக இருப்பார்கள். பாலாஜி மனைவி மீது மிகுந்த காதலுடன் இருப்பார். இந்த நிலையில் பாலாஜியின் சொத்துக்களை அடைய நினைக்கும் வில்லன்கள் கூட்டம், பாலாஜிக்கு விஜயகுமாரி மீது காதல் வர வைக்கும். காலப்போக்கில் அவருடனேயே இருக்க தொடங்குவார், தனது வருமானம், சொத்து எல்லாவற்றையும் அவருக்கே கொடுப்பார். இதனால் மனம் உடைந்த பாலாஜியின் தந்தை வீட்டை விட்டு சென்று விடுவார். குடும்பம் சிறிது சிறிதாக அழியத் தொடங்கும்போது அதே வில்லன் கோஷ்டி பண்டரிபாயை கடத்தும், அதன் பிறகு என்ன என்பது மீதி கதை.

படம் சொல்ல வந்த கருத்தை அன்றைய பெண்கள் ஏற்கவில்லையோ என்னவோ சூப்பர் ஹிட் பாடல்கள் அமைந்தும் படம் வெற்றி பெறவில்லை. தற்போதும் நல்ல குவாலிட்டியில் யு டியூப்பில் காண கிடைக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !