பாடலில் ஆபாசம் : மகளிர் ஆணையத்திடம் நேரில் மன்னிப்பு கேட்ட சஞ்சய் தத்
கன்னடத்தில் தயாரான படம் 'கேடி : தி டெவில்'. 1970-களின் பின்னணியில் தாதாக்களின் கதையாக உருவாகி உள்ளது. துருவா சர்ஜா கதாநாயகனாக நடித்துள்ளார். இவருடன் சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கேவிஎன் புரொடக்ஷன் தயாரித்துள்ளது.
இந்த படத்தில் பாலிவுட் கவர்ச்சி நடிகை நோரா பதேஹி சஞ்சய்தத்தடன் கவர்ச்சி பாடல் ஒன்றில் ஆடியுள்ளார். சர்கேர் சர்கேர் சுனார் தேரி சர்கேர் என்ற இந்த பாடலில் சில வரிகளும், நடன அசைவுகளும் ஆபாசத்தை வெளிப்படுத்துவதாக பல பெண் அமைப்புகள் புகார் கூறியிருந்தன. தேசிய மகளிர் ஆணையம் இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரித்தது. இதன்பேரில் சஞ்சய் தத்துக்கும், நோரா பதேஹிக்கும் நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில் நடிகர் சஞ்சய் தத், டில்லியில் உள்ள தேசிய மகளிர் ஆணையத்தில் நேற்று ஆஜரானார். மகளிர் ஆணைய தலைவி விஜயா ரகோத்கர் தலைமையிலான ஆணையத்தினர் அவரிடம் விசாரணைநடத்தினர். அப்போது சஞ்சய் தத், அந்த பாடல் வரிகள் வேறு மொழியில் இருந்ததால் எனக்கு அந்த வரிகளின் அர்த்தம் தெரியாது என கூறினார். இருப்பினும் அதனால் ஏற்பட்ட விளைவுகளுக்காக மன்னிப்பு கோருவதாகவும் கூறினார். இது மட்டுமின்றி, இதற்கு பிராயசித்தமாக பழங்குடியின குழந்தைகள் 50 பேருக்கு கல்வி நிதி அளிப்பதாகவும் உறுதி அளித்துள்ளார்.
நோரா பதேஹி இன்று அல்லது நாளை ஆஜராகி மன்னிப்பு கேட்பார் என்று தெரிகிறது.