மதிவதனி, காதம்பரி, பவானி, கோகிலா : நயன்தாரா நடிப்பில் கலக்கிய படங்கள்
இன்று நடிகை நயன்தாராவுக்கு பிறந்தநாள். கேரளாவில் சிறிய நகரமான திருவல்லாவில் குரியன் கொடியாட்டு மற்றும் ஓமனா குரியன் ஆகியோருக்கு மகளாகப் பிறந்தவர் டயனா குரியன். சினிமாவுக்காக நயன்தாரா ஆனார். இவர் தந்தை விமானப்படை அதிகாரியாகப் பணியாற்றியதால் டில்லி, பெங்களூர், ஜாம்நகர் உள்ளிட்ட பல நகரங்களில் பள்ளிப் படிப்பைத் தொடர்ந்தார்.
திருவல்லாவில் உள்ள மார் தோமா கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். சத்தியன் அந்திக்காடு இயக்கிய மனசினக்கரே (2003) படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். அந்த படத்தில் ஹீரோ மம்முட்டி. தமிழில் ஹரி இயக்கத்தில் சரத்குமார் நடித்த ஐயா படத்தின் மூலம் அடியெடுத்து வைத்தார்.
2011 ஆம் ஆண்டில், அவர் சென்னையில் உள்ள ஆர்ய சமாஜ் கோவிலில் இந்து மதத்திற்கு மாறினார். இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து சென்னையில் செட்டில் ஆனார். இவர்களுக்கு உயிர், உலக் என 2 மகன்கள் உள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் சேர்த்து 80-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நயன்தாரா பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்த சில முக்கியமான படங்கள் இதோ...
மதிவதனி - அறம்
நயன்தாரா நடித்த படங்களில் சிறந்த படங்களில் ஒன்று என அனைவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய படம் அறம் (2017). கோபி நயினார் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் மதிவதனி என்ற கேரக்டரில் கலெக்டராக நடித்தார். ஆழ்துளை கிணற்றுக்கு தோண்டிய பள்ளத்தில் விழுந்து தவிக்கும் குழந்தையை காப்பாற்ற போராடும் கேரக்டரில் அவர் நடிப்பு, அந்த கெட்அப், பாடிலாங்குவேஜ் அனைவராலும் பாராட்டப்பட்டது. தமிழக அரசின் விருது உட்பட பல விருதுகளை வென்றார். தமிழ் சினிமாவில் கலெக்டர் என்றால் அறம் படத்தின் மூலம் நயன்தாராவும் மனதிற்குள் வருவார்.
கோகிலா - கோலமாவு கோகிலா
நெல்சன் இயக்கிய இந்த படத்தில் குடும்ப சூழ்நிலை காரணமாக போதைப்பொருள் கடத்துபவராக கோகிலாவாக நயன்தாரா வருவார். அவரின் அப்பாவிதனமான நடிப்பு, குடும்ப பின்னணி, அடுத்து எடுக்கும் அதிரடி முடிவுகள், அவருக்காக அனிருத் உருவாக்கிய பின்னணி இசை, சில திருப்பங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. பிளாக் காமெடி டோனில் 2018ல் வெளியான இந்த படம் நயன்தாராவின் சினிமா வாழ்க்கையில் முக்கியமான கமர்ஷியல் படம்.
ரெஜினா - ராஜா ராணி
இயக்குனராக அட்லி அறிமுகமான இந்த படத்தில் ஜெய் ஜோடியாக ரெஜினா என்ற கேரக்டரில் நயன்தாரா வருவார். அவரின் காதல் காட்சிகள், ஜெய்யை போனில் கலாய்க்கும் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்தன. ஆர்யா திருமணத்துக்குபின் அவர் நடிப்பும் நச். காதலின் வலியை சொல்லும் அவர் நடிப்பு பல ஆண்களை மட்டுமல்ல, பெண்களும் கவர்ந்தது.
அஞ்சலி - இமைக்கா நொடிகள்
அஜய் ஞானமுத்து இயக்கிய படம் இது. கதைப்படி விஜய்சேதுபதி ஜோடி, சிபிஐ அதிகாரி அஞ்சலியாக நயன்தாரா வருவார். ஆனாலும், அதர்வா அக்காவாக அவர் வரும் காட்சிகள் அதிகம். பலரும் நயன்தாராவை அன்பு அக்காவாக பார்த்தனர். குறிப்பாக, வில்லன் அனுராக் காஷ்யப்பை அவர் துரத்தும் காட்சிகள், சண்டைகள் பேசப்பட்டன. கொஞ்ச நேரம் வந்தாலும் விஜய்சேதுபதி, நயன்தாரா காதல், திருமண காட்சிகள் டச்சிங். இதில் ஆக் ஷனிலும் கலக்கியிருந்தார் நயன்தாரா.
காதம்பரி - நானும் ரவுடிதான்
காது கேட்கும் திறன் இல்லாதவராக, மற்றவர்கள் உதட்டு அசைவு வைத்து அவர்கள் பேசுவதை புரிந்து கொள்பவராக மாறுபட்ட, சவாலான காதம்பரி என்ற கேரக்டரில் நடித்தார் நயன்தாரா. பார்த்திபனை பழி வாங்க நினைக்கும் அவரின் கோபம் இன்னும் அழகு. எனக்கும் நடிக்க தெரியும் என நயன்தாரா சொல்லாமல் சொன்ன படம். இந்த படத்தின் மூலம் இயக்குனர் விக்னேஷ் சிவன் காதலில் விழுந்து அவருக்கு மனைவி ஆனார். காதம்பரி, விஜய்சேதுபதி சம்பந்தப்பட்ட சீன்கள் மாஸ்.
கீர்த்தி என்ற கோமளவல்லி - யாராடி நீ மோகினி
திருநெல்வேலி பின்னணியில் கிராமத்தில் நடக்கும் கதை. ஆரம்பத்தில் கீர்த்தி என்ற ஐடி மார்டன் பெண்ணாகவும், கிராமத்தில் பக்கா ஆச்சாரமான கோமளவல்லி என்ற பெண்ணாகவும் வருவார் நயன்தாரா. பாவாடை சட்டை தாவணியில் நயன்தாராவை பார்த்த பலரும் இந்த மாதிரி பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என முடிவெடுத்தனர். தெலுங்கில் செல்வராகவன் இயக்கிய இந்த படத்தை தமிழில் தனுஷ், நயன்தாராவை வைத்து எடுத்தார் மித்ரன் ஜவஹர்.
மூக்குத்தி அம்மன் - மூக்குத்தி அம்மன்
தமிழில் பத்மினி, கே.ஆர்.விஜயா, மீனா, ரம்யா கிருஷ்ணன் உட்பட பலர் அம்மனாக நடித்து இருக்கிறார்கள். அந்தவகையில் நயன்தாராவை இந்த படத்தில் அம்மன் ஆக்கினார் ஆர்.ஜே.பாலாஜி. கதை, காமெடி, காமெடி ஆகியவை படத்தை வெற்றி படமாக்கியது. நயன்தாராவை யாரும் குறை சொல்லவில்லை. நயன்தாராவின் கம்பீரமான அம்மன் கெட்அப் பலரையும் ரசிக்க வைத்தது.
பவானி - ஐரா
கே.எம்.சர்ஜூன் இயக்கத்தில் இந்த படத்தில் யமுனா என்ற பத்திரிகையாளராக வருவார் நயன்தாரா. பிளாஷ்பேக் காட்சியில் பவானி என்ற அப்பாவி பெண்ணாக வருவார். அவரின் அந்த கிராமத்து தோற்றம், பயம், நடிப்பு, நேரம், அதிர்ஷ்டம் அதிகார வர்க்க வெறிக்கு பலியாகும் காட்சிகள் பலராலும் பாராட்டப்பட்டன. அந்த பிளாஷ்பேக் காட்சிகள் கறுப்பு வெள்ளையில் படமாக்கப்பட்டன. நயன்தாராவும் கருப்பு மேக்கப்புக்கு மாறி நடித்தார். குறிப்பாக, மேகதுாதம் பாடல் இன்றும் ரசிக்கப்படுகிறது.
துர்கா - நெற்றிக்கண்
கண் பார்வையற்றவராக நயன்தாரா நடித்த கிரைம் திரில்லர் கரு. பிளைண்ட் என்ற கொரியன் படத்தை தழுவி, மிலிந்தராவ் இயக்கிய படம். துர்காவாக நயன்தாரா நடிப்பை சிலர் விமர்சித்தாலும், பலர் பாராட்டினார்கள்.
நிரஞ்சனா - விஸ்வாசம்
சிவா இயக்கத்தில் உருவான இந்த படத்தில் நிரஞ்சனா என்ற மருத்துவ உயரதிகாரியாக ஸ்டைலாக வருவார். கிராமத்து காட்சிகளில் இன்னும் அழகாக தெரிவார். அஜித் சம்பந்தப்பட்ட சீன்களில் அவர் நடிப்பில் ஒருவித தெனாவெட்டு, கம்பீரம் இருக்கும். சுயமரியாதை, மன உறுதி கொண்ட நிரஞ்சனா பலருக்கும் பிடித்த கேரக்டர்.
இந்த படங்கள் தவிர, ஐயா, தனி ஒருவன், மாயா, இருமுகன், காஷ்மோரா, பாஸ் என்ற பாஸ்கரன், டோரா, ஹாய், ஹிந்தியில் ஜவான், தெலுங்கில் ஸ்ரீராம ராஜ்ஜியம் படங்களிலும் நயன்தாரா நடிப்பு கவனம் பெற்றது.