புதிய படத்திற்காக தனி விமானத்தில் கேரளாவுக்கு பறந்த அக்ஷய் குமார், வித்யா பாலன்
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் கடந்த வாரம் பூத் பங்களா திரைப்படம் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படம் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. தற்போது தனது புதிய படத்தின் படப்பிடிப்பு ஒன்றுக்காக கேரளாவிற்கு கிளம்பிச் சென்றுள்ளார் அக்ஷய் குமார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வித்யா பாலனும் அக்ஷய் குமார் உடன் தனி விமானத்தில் புறப்பட்டு சென்றுள்ளார். இது குறித்த வீடியோ ஒன்றை நடிகர் அக்ஷய் குமார் தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டு இந்த தகவலை தெரியப்படுத்தியுள்ளார்.
ஏற்கனவே ஹே பேபி, பூல் புலையா மற்றும் 2019ல் வெளியான மிஷன் மங்கள் உள்ளிட்ட படங்களில் அக்ஷய் குமாருடன் வித்யா பாலன் இணைந்து நடித்துள்ளார். இந்த புதிய படத்தை இயக்குனர் அனீஸ் பாஷ்மீ இயக்குகிறார். இவரும் அக்ஷய் குமாருடன் ஏற்கனவே சிங் இஸ் கிங், வெல்கம் மற்றும் தேங்க்யூ ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றியவர்தான். கிட்டத்தட்ட 15 வருடங்கள் கழித்து மீண்டும் இந்த படத்தில் அக்ஷய் குமாரை இவர் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அது மட்டுமல்ல பிரியதர்ஷன் இயக்கத்தில் விரைவில் அடுத்து வெளியாக இருக்கும் ஹைவான் என்கிற படத்திற்காகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அக்ஷய் குமார் இதே கேரளாவில் நடைபெற்ற படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என்பதும் தற்போது அடிக்கடி கேரளாவிற்கு வருகை தர ஆரம்பித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.